போதைப்பொருள் கடத்தல் வழக்கில் நைஜீரிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் நைஜீரியா நாட்டை சேர்ந்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோவை கோர்ட்டு தீர்ப்பளித்து உள்ளது.
கோவை,
நைஜீரியா நாட்டை சேர்ந்தவர் ஜேம்ஸ் (வயது 30). இவர் ஈரோட்டில் தங்கி இருந்து அங்குள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார். அவர் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு திருப்பூரில் பனியன் துணிகளை வாங்கி தனது சொந்த நாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். அதில் அவருக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை. நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் அவருக்கு போதை பொருட்களை கடத்தும் கும்பலுடன் தொடர்பு ஏற்பட்டது. அவர் கோவை பீளமேட்டில் உள்ள ஒரு கூரியர் நிறுவனத்துக்கு நைஜீரியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள நாடுகளுக்கு சில பொருட்களை அடிக்கடி அனுப்பி உள்ளார். இது பற்றி கூரியர் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் கேட்ட போது அலங்கார பொருட்கள் என்று கூறியுள்ளார்.
ஆனாலும் அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்களுக்கு ஜேம்ஸ் மீது சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து அவர்கள் சென்னையில் உள்ள போதை பொருட்கள் தடுப்பு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் கோவை வந்து, ஜேம்ஸ் அனுப்ப கொடுத்த பார்சல்களை திறந்து பார்த்தனர்.
அதில், அலங்கார பொருட்களுடன் சிறிய அளவில் ஏராளமான பொட்டலங்களுக்குள் 500 கிராம் ஹெராயின் போதை பொருள் இருந்தது. அவற்றின் அப்போதைய சந்தை மதிப்பு ரூ.2 கோடி ஆகும். இதன் மூலம் அவர் போதை பொருட்கள் கடத்தியது தெரியவந்தது.
உடனே அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கூரியர் நிறுவன ஊழியர்கள் மூலம் ஜேம்சிடம் நைசாக பேசி அவரை கடந்த 23–5–2012 அன்று அந்த கூரியர் நிறுவனத்துக்கு வரவழைத்தனர். அங்கு அவர் வந்ததும் மறைந்திருந்த போலீசார் ஜேம்சை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு கோவையில் உள்ள இன்றியமையா பண்டங்கள் மற்றும் போதை பொருள் வழக்கு சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட ஜேம்சுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி அல்லி தீர்ப்பு கூறினார். இதையடுத்து போலீசார் ஜேம்சை பலத்த பாதுகாப்புடன் அழைத்துச்சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.