காஞ்சீபுரம் மாவட்டத்தில் நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பில் பயிற்சி கலெக்டர் தொடங்கி வைத்தார்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பில் ஒழுங்கு நடவடிக்கைகள், அலுவலக நடைமுறைகள் குறித்த பயிற்சியை கலெக்டர் பொன்னையா தொடங்கி வைத்தார்.
காஞ்சீபுரம்,
தமிழ்நாடு அரசின் பணியாளர் நிர்வாக சீர்த்திருத்தத்துறையின் மூலம் காஞ்சீபுரம் மாவட்டத்தில் பணிபுரியும் நேர்முக உதவியாளர்கள், நிர்வாக அலுவல்கள் நிலையிலான அலுவலகர்களுக்கு ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்த பயிற்சியும், கண்காணிப்பாளர் நிலையிலான அலுவலர்களுக்கு அலுவலக நடைமுறைகள் குறித்த குறுகிய கால பயிற்சியையும் கலெக்டர் பொன்னையா தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறுகையில்:– அரசு அலுவலர்கள் ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் அலுவலக நடைமுறைகள் குறித்து அறிந்திருந்தாலும், இடைவெளி இல்லாமல் தொடர்ந்து பணியாற்றி வரும்போது அரசால் அவ்வப்போது வழங்கப்படும் உத்தரவுகள் மற்றும் ஆணைகளை அறிந்து செயல்படும் வகையில் இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
அலுவலர்கள் இது குறித்து விரிவாக அறிந்து பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி நூர்முகமது, நிர்வாக சீர்திருத்த துறையின் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் பயிற்சி இயக்குனர் ரெகொபெயாம், பிரிவு அலுவலர் ஜெகதீஷ், பயிற்சியாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் விஜயகுமாரி, துணை மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் லட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.