மத்தியஅரசின் கணக்கெடுப்புபடி விருதுநகர் பின் தங்கிய மாவட்டமாக அறிவிப்பு
விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களை பின்தங்கிய மாவட்டங்களாக அறிவித்துள்ள மத்திய அரசு இம்மாவட்டங்களில் திட்டப்பணிகளை கண்காணிக்க 2 சிறப்பு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்துள்ளது.
விருதுநகர்,
மத்திய அரசு நாடு முழுவதும் ஏழ்மை, சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றின் அடிப்படையில் பின் தங்கிய மாவட்டங்களை கண்டறிய கணக்கெடுப்பு நடத்தியது. இதில் 115 மாவட்டங்கள் பின் தங்கியவையாக கண்டறியப்பட்டது. விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களும் பின்தங்கிய மாவட்டங்களாக இந்த கணக்கெடுப்பு பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் இந்த பட்டியலில் ஏழ்மை நிலையில் 16– வது இடத்தையும், சுகாதாரத்தில் 100–வது இடத்தையும் கல்வியில் 114–வது இடத்தையும், உள்கட்டமைப்பு வசதியில் 105–வது இடத்தையும் பெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ஏழ்மையில் 38–வது இடத்தையும், சுகாதாரம் மற்றும் கல்வியில் 111–வது இடத்தையும், உள்கட்டமைப்பு வசதியில் 104–வது இடத்தையும் பெற்றுள்ளது.
விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் மத்திய அரசின் திட்டடப்பணிகளை கண்காணிக்கவும், இந்த 4 பிரிவுகளிலும் இந்த மாவட்டங்கள் வளர்ச்சி அடையவும் மத்திய அரசு பிரவீன்குமார், கோபாலகிருஷ்ணன் ஆகிய 2 சிறப்பு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்துள்ளது. இவர்கள் இருவரும் தமிழகதத்தை சேர்ந்தவர்கள்.
பிரவீன்குமார் மத்திய அரசில் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் கூடுதல் செயலாளராகவும், கோபாலகிருஷ்ணன் மத்திய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையில் இணை செயலாளராகவும் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களை பிரதமமந்திரியின் 2022–ம் ஆண்டு தொலைநோக்கு திட்டத்தின்படி முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல தேவையான நடவடிக்கைகள் எடுப்பார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இவர்கள் நேற்று இந்த மாவட்ட அதிகாரிகளுடன் திட்டப்பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். மாநில அரசின் சார்பில் இவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான சந்தோஷ்பாபு, அமுதா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.