கூட்டுறவு சர்க்கரை ஆலை; அமைச்சரவை முடிவை கவர்னர் ரத்துசெய்ய வேண்டும் பாரதீய ஜனதா வலியுறுத்தல்
கூட்டுறவு சர்க்கரை ஆலையை தனியாரிடம் ஒப்படைக்கும் அமைச்சரவையின் முடிவினை கவர்னர் ரத்து செய்யவேண்டும் என்று பாரதீய ஜனதா வலியுறுத்தி உள்ளது.
புதுச்சேரி,
பாரதீய ஜனதா கட்சியின் புதுவை மாநில தலைவர் சாமிநாதன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
புதுவை மாநிலத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான ஒரே கூட்டுறவு சர்க்கரை ஆலையை தனியாருக்கு தாரை வார்ப்பதை பாரதீய ஜனதா வன்மையாக கண்டிக்கிறது. ஆளும் காங்கிரஸ் அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும். தனியாருக்கு ஆலையை கொடுப்பதன் மூலம் புதுச்சேரி மாநில கரும்பு விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள்.
தனியாருக்கு ஆலையை கொடுப்பதன் மூலம் புதுச்சேரி மாநில கரும்பு விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். சுமார் ரூ.30 கோடி நிதி கொடுத்து ஐ.ஏ.எஸ். ஒருவர் தலைமையில் நிர்வாகம் நடைபெற வழிவகை செய்யவேண்டும். அரசின் நிர்வாக சீர்கேட்டின் விளைவாக இப்போது நஷ்டத்தை சந்தித்துள்ளது. திறம்பட ஆலையை நடத்தி இருந்தால் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி இருக்கலாம்.
ரோடியர், சுதேசி மில்கள், பிப்டிக் போன்ற அரசு சார்பு நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. அதையும் தனியாருக்கு தர அரசு முன்வருமா? அனைத்து கூட்டுறவு நிறுவனங்களையும் சரிசெய்ய குழு அமைக்கவேண்டும். குறைந்த முதலீடு, வாடகை இடம், வரி இவற்றை சமாளித்து தனியார் நிறுவனங்கள் பலகோடி ரூபாய் லாபம் ஈட்டும்போது, சொந்த இடம், அரசே நடத்தும் கூட்டுறவு சர்க்கரை ஆலை நஷ்டம் என்றால் அதற்கு நிர்வாக திறமையின்மை தான் காரணம்.
அமைச்சரவை கூட்டத்தில் கூட்டுறவு சர்க்கரை ஆலையை தனியாருக்கு விடுவது என எடுக்கப்பட்ட முடிவை கவர்னர் ரத்து செய்யவேண்டும். வெற்றிகரமாக பல ஆண்டுகள் இயங்கிவந்த லிங்காரெட்டிபாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் அரசு ஏற்று நடத்த வேண்டும். பிற மாநிலங்களைப்போல் கரும்பு சக்கையை கொண்டு மின்சாரம் தயாரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.