‘ஒகி’ புயலில் சிக்கி கடலூரை சேர்ந்த மேலும் ஒரு மீனவர் மாயம்


‘ஒகி’ புயலில் சிக்கி கடலூரை சேர்ந்த மேலும் ஒரு மீனவர் மாயம்
x
தினத்தந்தி 6 Dec 2017 4:15 AM IST (Updated: 6 Dec 2017 2:43 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் இருந்து கேரளா, கன்னியாகுமரிக்கு மீன்பிடிக்க சென்றதில் மேலும் ஒரு மீனவர் ஒகி புயலால் மாயமானார்.

கடலூர் முதுநகர்,

கடலூர் துறைமுகத்தில் இருந்து தினசரி நூற்றுக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வார்கள். இதை தவிர இங்குள்ள மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் தினக்கூலி அடிப்படையில் கேரளா மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு சென்று, அங்குள்ள துறைமுக பகுதியில் இருந்து மீன்பிடிக்க செல்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

அந்த வகையில், கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம், சோனாங்குப்பம், பரங்கிப்பேட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் தினக்கூலி அடிப்படையில் மீன்பிடி தொழிலுக்காக பஸ்களில் கேரள மாநிலம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சென்றனர். அங்கிருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கடந்த 30-ந் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தை தாக்கிய ‘ஒகி’ புயலால், நடுக்கடலில் சிக்கி கொண்டனர். இவர்கள் இதுவரையில் திரும்பி வரவில்லை. அவர்களில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 24 பேர் வரையில் புயலில் சிக்கி தவித்து வருவதாக அவர்களது குடும்பத்தினர் மீன்வளத்துறை அதிகாரியிடம் புகார் மனு கொடுத்துள்ளனர். இவர்களில் 10 பேர் மீட்கப்பட்டனர். மீதமுள்ளவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ராசாப்பேட்டையை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்ற மீனவர் மீன் பிடிப்பதற்காக கேரளாவுக்கு சென்று இதுவரை வீடுதிரும்பவில்லை என்று அவரது குடும்பத்தினரும், ஊர் முக்கியஸ்தர்களும் நேற்று மீன்வளத்துறை அதிகாரி ரம்யாலட்சுமியிடம் புகார் கொடுத்தனர். இதையடுத்து மொத்தம் 15 மீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Next Story