கந்துவட்டி கொடுமை: விழுப்புரம் தங்கும் விடுதியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


கந்துவட்டி கொடுமை: விழுப்புரம் தங்கும் விடுதியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 6 Dec 2017 5:45 AM IST (Updated: 6 Dec 2017 3:06 AM IST)
t-max-icont-min-icon

கந்துவட்டி கொடுமையால் விழுப்புரம் தங்கும் விடுதியில் திருச்சி வாலிபர், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விழுப்புரம்,

திருச்சி மாவட்டம் பாலக்கரையை அடுத்த துரைசாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் மகன் அருண்குமார் (வயது 29). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலையில் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் அருகில் ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினார்.

நேற்று முன்தினம் இரவு அருண்குமார், வெளியில் சென்று ஓட்டலில் சாப்பிட்டார். பின்னர் அவர் தான் தங்கியிருந்த அறைக்கு சென்றார். நள்ளிரவு 12.30 மணியளவில் அவருடைய அறையில் இருந்து மட்டும் டி.வி. சத்தம் கேட்டது. உடனே தங்கும் விடுதி ஊழியர்கள், அந்த அறைக்கு சென்று கதவை தட்டினர். வெகு நேரம் கதவை தட்டிப்பார்த்தும் திறக்காததால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள், அந்த அறையின் ஜன்னல் கதவை உடைத்து பார்த்தபோது அருண்குமார், அங்குள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கில் பிணமாக தொங்கினார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த விடுதி ஊழியர்கள், உடனே இதுபற்றி விழுப்புரம் மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் இன்ஸ்பெக்டர் காமராஜ், சப்-இன்ஸ்பெக்டர் மருதப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள், அந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று அருண்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அருண்குமார் கொண்டு வந்திருந்த பையை போலீசார் சோதனை செய்ததில் அதனுள் கட்டுக்கட்டாக ரூ.1 லட்சமும், பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பான வரவு- செலவு கணக்கு புத்தகங்களும் மற்றும் அருண்குமாரின் ஓட்டுனர் உரிமம், ஆதார் கார்டு, செல்போன் ஆகியவையும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

மேலும் அருண்குமார் எழுதிய உருக்கமான கடிதமும் போலீசாரிடம் சிக்கியது. அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு எழுதி வைத்திருந்த அந்த கடிதத்தில் கூறியிருந்ததாவது:-

கந்துவட்டி கும்பலின் முகத்திரையை கிழிக்க வேண்டும் என்று போராடினேன். ஆனால் என்னால் முடியவில்லை. திருச்சியை சேர்ந்த தொழில் அதிபரின் பெயரை குறிப்பிட்டு, அவரிடம் நானும், எனது சகோதரரும் சிறுவயதிலேயே வேலைக்கு சேர்ந்தோம். 18 ஆண்டுகள் எங்களை அவர் கந்துவட்டி வசூலில் கொத்தடிமைகளாக வைத்திருந்தார். அவர் பொன்மலை ரெயில்வே ஊழியர்கள், பொதுமக்கள் என பலரிடம் இருந்து சொத்து ஆவணங்களை வாங்கி வைத்துக்கொண்டு கந்துவட்டியில் கடன் வழங்கி வந்தார்.

சமீபகாலமாக கந்துவட்டி பிரச்சினை பெரும் பிரச்சினையாக இருந்தது. அப்போதுதான் அப்பாவி மக்களை ஏமாற்றி கந்துவட்டி செய்த கும்பலுக்கு முடிவுகட்ட நினைத்தேன். ஒரு வருடமாக ஆதாரங்களை திரட்டியும் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. நானும் அவரிடம் கடன் வாங்கியிருந்தேன். அதை வட்டிபோட்டு பணம் கேட்டார். கந்துவட்டி கொடுமையால் நான் மிகுந்த மன உளைச்சலில் இருந்தேன். எனவே கந்துவட்டி கும்பலை உடனே கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மருது, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கரவடிவேல் ஆகியோர் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு அந்த தனிப்படை போலீசார் திருச்சிக்கு விரைந்து சென்று அருண்குமாரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர்.

மேலும் அருண்குமார் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்த தொழிலதிபரை போலீசார் தேடி வருகின்றனர். கந்துவட்டி கொடுமையால் விழுப்புரம் தங்கும் விடுதியில் திருச்சியை சேர்ந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story