பயிர் காப்பீடு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்


பயிர் காப்பீடு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Dec 2017 3:19 AM IST (Updated: 6 Dec 2017 3:19 AM IST)
t-max-icont-min-icon

பயிர் காப்பீடு தொகை வழங்கக்கோரி குறைதீர்வு கூட்டத்தின்போது விவசாயிகள் வெளிநடப்பு செய்து கையில் திருவோடு ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் நேற்று தாலுகா அளவிலான விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். வேளாண்மை உதவி இயக்குனர் அரக்குமார் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் திருவண்ணாமலை தாலுகா பகுதிக்கு உட்பட்ட சிவக்குமார், சாமி, சரவணன் உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை குறித்து பேசினர். அப்போது அவர்கள் கூறுகையில், “திருவண்ணாமலை மாவட்டத்தில் போதிய அளவு மழை பெய்தும் பெரும்பாலான ஏரி, குளங்கள் நிரம்பவில்லை. எனவே ஏரி, குளங்களுக்கு செல்லும் கால்வாய்களை தூர் வார வேண்டும். பயிர் காப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும். தண்ணீரின்றி காய்ந்து போன பயிர்களுக்கு வளர்ச்சி நிவாரண நிதி வழங்க வேண்டும். கரும்பு நிலுவை தொகையை வழங்க வேண்டும்” என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

பின்னர் கூட்டத்தில் இருந்து வெளியே வந்த விவசாயிகள் கூட்ட அரங்கம் முன்பு நின்று கையில் ‘திருவோடு’ ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், “பயிர் காப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும். அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் மழையின்போது நாசமானதால் அவற்றுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும்” என கோரிக்கை விடுத்து கோஷமிட்டனர்.

Next Story