நாங்குநேரி அருகே டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி பலி
டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி பலி, சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தாள்.
நாங்குநேரி,
நாங்குநேரி– மூலைக்கரைப்பட்டி ரோட்டில் உள்ள தெற்கு இளையார்குளத்தை சேர்ந்தவர் பொன் பெருமாள் (வயது 35). இவருடைய மனைவி லதா (30). இவர்களுடைய மகள் சுவேதா (5). மூலைக்கரைப்பட்டியில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளிக்கூடத்தில் யு.கே.ஜி. படித்து வந்தாள். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுவேதாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனாலும் அவளுக்கு காய்ச்சல் குறையவில்லை. இதையடுத்து அவளது ரத்த மாதிரியை எடுத்து பரிசோதனை செய்து பார்த்தபோது, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவு சுவேதா பரிதாபமாக இறந்தாள்.