கேமராவை வாடகைக்கு எடுத்து மோசடி: சொகுசு காரில் கடத்தப்பட்ட குறும்பட இயக்குனர் மீட்பு 5 பேர் கைது
கேமராக்களை வாடகைக்கு எடுத்து மோசடியில் ஈடுபட்டதாக சொகுசு காரில் கடத்தப்பட்ட குறும்பட இயக்குனரை 5 மணி நேரத்தில் போலீசார் மீட்டனர்.
அம்பத்தூர்,
சென்னை அம்பத்தூரை அடுத்த மேனாம்பேடு பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கேசவன்(வயது 24). குறும்பட இயக்குனரான இவர், சமுதாய நோக்குடன் கூடிய குறும்படங்களை இயக்கி உள்ளார்.
கேசவன், நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் சென்னை அண்ணாநகர் திருமங்கலம் 18-வது மெயின் ரோட்டில் தனது நண்பரான திருமங்கலம் வசந்தம் காலனியை சேர்ந்த சுரேஷ்(25) என்பவருடன் பேசிக்கொண்டு இருந்தார்.
அப்போது அவர்கள் அருகில் திடீரென சொகுசு கார் ஒன்று வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய 5 வாலிபர்கள், குறும்பட இயக்குனர் கேசவனை சரமாரியாக அடித்து உதைத்து, தாங்கள் வந்த காரிலேயே அவரை வலுக்கட்டாயமாக ஏற்றினர். இதை தடுக்க முயன்ற அவருடைய நண்பர் சுரேஷை மிரட்டி விட்டு கேசவனை காரில் கடத்திச்சென்றனர்.
போலீசார் மீட்டனர்
உடனடியாக சுரேஷ், இது குறித்து கேசவனின் தந்தை சந்திரசேகருக்கு போனில் தகவல் தெரிவித்தார். மகன் கடத்தப்பட்ட தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்த அவர், இதுபற்றி திருமங்கலம் போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கடத்தலுக்கு பயன்படுத்திய காரின் பதிவு எண்ணை வைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
கோயம்பேடு அருகில் இரவு 2 மணியளவில் கேசவனை கடத்திச்சென்ற சொகுசு காரை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர். கடத்தப்பட்ட கேசவனை மீட்ட போலீசார், அவர் உள்பட காரில் இருந்த 6 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விாரித்தனர்.
கேமரா விற்பனை
அதில் குறும்பட இயக்குனர் கேசவன், சென்னை சின்மயா நகரைச் சேர்ந்த சங்கர்(24) என்பவரிடம் குறும்படம் எடுக்க வேண்டும் என்று கூறி கடந்த ஜூன் மாதம் விலை உயர்ந்த 2 கேமராக்களை வாடகைக்கு வாங்கினார்.
ஆனால் அதற்கான வாடகையையும் கொடுக்காமல், வாங்கிய கேமராக்களையும் திரும்ப கொடுக்காமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. கேமராவை வாடகைக்கு கொடுத்த சங்கர், இதுபற்றி விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். அந்த புகார் நிலுவையில் உள்ளது.
இதற்கிடையில் வாடகைக்கு எடுத்த கேமராக்களை கேசவன் விற்பனை செய்து விட்டதாக தெரிய வந்தது. இதனால் சங்கர், கேசவனை செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை.
இதையடுத்து சங்கர், தனது நண்பர் ஒருவர் மூலமாக குறும்படம் எடுக்க வேண்டும் என்று கூறி கேசவனிடம் பேச வைத்தார். போனை எடுத்து பேசிய கேசவன், திருமங்கலம் 18-வது மெயின்ரோடுக்கு வரும்படி கூறினார். அதன்படி நண்பருடன் அங்கு வந்த கேசவனை சங்கர் மற்றும் அவருடைய நண்பர்கள் சொகுசு காரில் வந்து கடத்திச்சென்றது விசாரணையில் தெரிய வந்தது.
5 பேர் கைது
இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட சங்கர் மற்றும் அவருடைய நண்பர்களான சாலிகிராமத்தை சேர்ந்த மகேஷ்(26), ஆகாஷ்(27), தங்கராஜ்(22), திருப்பத்தூரை சேர்ந்த கவுதம்(22) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கேசவனை சரமாரியாக தாக்கி காரில் ஏற்றிய இவர்கள், காருக்குள் வைத்தும் அவரை தாக்கியதாக தெரிகிறது. இதில் கேசவன் காயம் அடைந்தார். கடத்தப்பட்ட 5 மணி நேரத்தில் கேசவனை போலீசார் மீட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கைதான 5 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்த போலீசார், உண்மையிலேயே சங்கரிடம் கேமராக்களை வாடகைக்கு வாங்கி மோசடியில் ஈடுபட்டாரா? என குறும்பட இயக்குனர் கேசவனிடம் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story