தேர்தல் பிரசாரம் நோக்கத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை சித்தராமையா பேட்டி
தேர்தல் பிரசாரம் நோக்கத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை என்று சித்தராமையா கூறினார்.
பெங்களூரு,
தேர்தல் பிரசாரம் நோக்கத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை என்று சித்தராமையா கூறினார்.
சித்தராமையா பேட்டிசட்டமேதை அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி பெங்களூரு விதான சவுதா வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு நேற்று முதல்–மந்திரி சித்தராமையா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மந்திரிகள் ஆஞ்சனேயா, மகாதேவப்பா, ஆர்.வி.தேஷ்பாண்டே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதன் பிறகு சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
தேர்தலை மனதில் வைத்து நான் வருகிற 13–ந் தேதி ஒரு மாத சுற்றுப்பயணத்தை தொடங்கவில்லை. அரசு திட்ட பணிகளை தொடங்கி வைத்தல், அடிக்கல் நாட்டுதல் போன்ற பணிகளுக்காக சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளேன். இந்த சுற்றுப்பயணம் ஒன்றும் புதியது இல்லை. கடந்த 5 ஆண்டுகளாக இவ்வாறு சுற்றுப்பயணம் செய்து அரசு திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறேன். இந்த சுற்றுப்பயணத்தை எதிர்க்கட்சிகள் குறை கூறுவது சரியல்ல. தேர்தல் பிரசாரம் நோக்கத்தில் இந்த சுற்றுப்பயணத்தை நான் மேற்கொள்ளவில்லை.
அமைதிக்கு பங்கம்கர்நாடகத்தில் சட்டம்–ஒழுங்கை நிலைநாட்டுவது மாநில அரசின் கடமை. அமைதியை சீர்குலைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். பிரதாப்சிம்ஹா எம்.பி. உன்சூரில் அனுமன் ஜெயந்தியையொட்டி தடை விதிக்கப்பட்ட பகுதிகளில் ஊர்வலம் நடத்த முயற்சி செய்தார். அமைதிக்கு பங்கம் ஏற்படலாம் என்று கருதியதால் அவரை போலீசார் கைது செய்தனர்.
தன்னை போலீசார் கைது செய்ததில் போலீஸ் மந்திரியின் ஆலோசகர் கெம்பையா மீது குற்றம் சுமத்துவது சரியல்ல. இதில் கெம்பையாவின் பங்கு ஒன்றும் இல்லை. மைசூரு போலீஸ் சூப்பிரண்டுடன் கெம்பையா பேசியதில் என்ன தவறு உள்ளது?. போலீஸ் மந்திரியின் ஆலோசகராக இருப்பவர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுடன் பேசுவதில் தவறு இல்லை.
மரியாதையை செலுத்தினோம்அரசியல் சாசனத்தில் அம்பேத்கர் கூறிய கொள்கைகளின்படி எங்கள் அரசு செயலாற்றி வருகிறது. அவருடைய இந்த நினைவு நாளில் அவரது விருப்பங்களை நிறைவேற்ற நாங்கள் எங்களை அர்ப்பணித்து கொள்கிறோம். அம்பேத்கருக்கு அரசு சார்பில் உரிய மரியாதையை செலுத்தினோம்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.