கடம்பத்தூரில் கால்வாயை சீரமைத்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்


கடம்பத்தூரில் கால்வாயை சீரமைத்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 7 Dec 2017 4:30 AM IST (Updated: 7 Dec 2017 12:49 AM IST)
t-max-icont-min-icon

கடம்பத்தூரில் கால்வாயை சீரமைத்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் முதல்நிலை ஊராட்சிக்கு உட்பட்ட வெண்மனம்புதூர் கிராமத்தில் சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு அண்ணாதெரு, வெண்மனம்புதூர் என பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் வெண்மனம் புதூரில் இருந்து வெள்ளக்கால்வாய் வழியாக வெண்மனம் புதூர் ஏரிக்கு கால்வாய் செல்கிறது. இந்த வரவு கால்வாயை அந்த பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து கட்டிடங்களை கட்டியுள்ளனர்.

இதனால் மழை காலங்களில் மழைநீர் இந்த கால்வாய் வழியாக வெண்மனம்புதூர் ஏரிக்கு செல்ல முடியாத நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

சாலை மறியல்

இந்த வரவு கால்வாய் ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்றி தண்ணீர் செல்லும் வகையில் சீரமைத்து தரவேண்டும் என கடம்பத்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் தலைமையில் பொதுமக்கள், மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் இது நாள் வரையிலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் நேற்று வெண்மனம்புதூர் பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள் இந்த ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்றி கால்வாயை சீரமைத்து தரவேண்டும் என வலியுறுத்தி திடீரென வெண்மனம்புதூர்- விடையூர் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இது பற்றி தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அந்த பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story