பாபர் மசூதி இடிப்பு தினம்: முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம் 1,120 பேர் கைது
திருவள்ளூரில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் கருப்பு சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் எம்.ஜி.ஆர். சிலை அருகே நேற்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளான டிசம்பர் மாதம் 6-ந்தேதியை பயங்கரவாத எதிர்ப்பு தினமாக கடைபிடித்து கருப்பு சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் ஷேக்தாவூத் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ஷேக்மொய்தீன், நூர்முகமது, அக்பர், உமர்கையூம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட சுமார் 1000-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்து கொண்டு பாபர் மசூதி இடிப்பை கண்டித்தும் , மசூதி இடிப்பு வழக்கை விரைவாக முடிக்கக்கோரியும், மசூதி இட பிரச்சினையில் ஆவணங்களின் அடிப்படையில் நியாயமான தீர்ப்பு வழங்கக்கோரியும் கருப்பு உடையணிந்து அனைவரும் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது ஆர்ப்பாட்டத்திற்கு உரிய அனுமதி பெறாததை தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது போலீசாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போலீசார் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 1120 பேரை கைது செய்து திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அனைவரையும் விடுவித்தனர்.
Related Tags :
Next Story