ரூ.109½ கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டு ஆகியும் திறக்கப்படாமல் உள்ள அதிநவீன சோதனைச்சாவடி
ரூ.109½ கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்ட அதிநவீன சோதனைச்சாவடி ஒரு ஆண்டுக்கு பின்னரும் திறக்கப்படாமல் உள்ளது.
கும்மிடிப்பூண்டி,
தமிழகத்துடன் வடமா நிலங்களை இணைக்கும் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கடத்தல், எடை மற்றும் வரி ஏய்ப்பு போன்றவற்றை கண்டறியும் வகையில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூர் அருகே தமிழக அரசின் அதி நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி ஒரு கிலோமீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனைச்சாவடி ரூ.109 கோடியே 46 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனைச்சாவடியில் ஆந்திரா மற்றும் வட மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்குள் வரும் வாகனங்களுக்காக 10 வழித்தடங்களும், தமிழகத்தில் இருந்து ஆந்திரா மற்றும் வடமாநிலங்களுக்கு செல்லும் வாகனங்களுக்காக 6 வழித்தடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
கடத்தல் பொருட்களை மிக நுட்பமாக கண்டறியும் வகையில் ஒவ்வொரு வழித்தடத்திலும் ஸ்கேனிங் வசதியும், சரக்கு வாகனங்களுக்கான எடை மேடையும் அமைக்கப்பட்டுள்ளன.
தரத்துடன் உள்ளன
இங்கு போக்குவரத்து துறையினருக்கு என தனி கட்டிடமும், தீயணைப்புத்துறைக்கு கட்டிடமும், வருவாய்த்துறை, உணவு பொருள் வழங்கல் துறை, போலீஸ், கலால் உள்ளிட்ட துறைகளுக்கு தனி தனி அலுவலகங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், சோதனையில் சிக்கும் வாகனங்களை நிறுத்துவதற்காக இங்கு போதிய இடவசதி, பறிமுதல் செய்யப்படும் பொருட்களை பாதுகாக்கும் வகையில் அதற்கான குடோன்கள், உணவு விடுதிகள், வாகன டிரைவர் களுக்கான ஓய்வு அறைகள், குளியல் மற்றும் கழிவறை வசதிகள் என அனைத்து வசதிகளும் தரத்துடன் அமைக்கப்பட்டுள்ளன.
ஓராண்டு ஆகியும்...
இதுதவிர இணையதள வசதியுடன், கண்காணிப்பு கேமரா வளையத்திற்குள் 24 மணி நேரமும் இந்த சோதனைச்சாவடி முழுமையாக இயங்கிடும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியின் கட்டுமான பணிகள் முடிந்து ஒரு ஆண்டு ஆகியும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. கடத்தல், எடை மற்றும் வரி ஏய்ப்பு போன்றவற்றை தடுக்க நவீன வசதியுடன் அமைந்த இந்த சோதனைச்சாவடி திறக்கப்படும்போது ஒரே இடத்தில் அனைத்து வசதிகளும் முழுமையாக பயன்பாட்டுக்கு வரும்.
தமிழக-ஆந்திர எல்லையோர பாதுகாப்பு மற்றும் அரசுக்கு வருவாய் ஈட்டி தர தயாராக உள்ள இந்த நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி ஏப்போது திறப்பு விழா காணப்போகிறதோ? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
Related Tags :
Next Story