சேலம், நாமக்கல் கூட்டுக்குடிநீர் திட்ட கான்கிரீட் குழாயில் உடைப்பு; குடிநீர் வினியோகம் நிறுத்தம்


சேலம், நாமக்கல் கூட்டுக்குடிநீர் திட்ட கான்கிரீட் குழாயில் உடைப்பு; குடிநீர் வினியோகம் நிறுத்தம்
x
தினத்தந்தி 7 Dec 2017 4:30 AM IST (Updated: 7 Dec 2017 1:03 AM IST)
t-max-icont-min-icon

சேலம், நாமக்கல் கூட்டுக்குடிநீர் திட்ட கான்கிரீட் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது.

சேலம்,

சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்கள் குடிநீர் தேவைக்காக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் பராமரிக்கப்பட்டு வரும் ராசிபுரம், எடப்பாடி நகராட்சிகள், 7 பேருராட்சிகள் மற்றும் வழியோர குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. குடிநீர் கொண்டு செல்லும் 600 மில்லி மீட்டர் விட்டமுள்ள கான்கிரீட் குழாயில் நெடுங்குளம் காட்டூர் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகிலும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கொண்டு செல்லும் 600 மில்லி மீட்டர் விட்டமுள்ள கான்கிரீட் குழாயில் எடப்பாடி பஸ் நிலையம் அருகிலும் என 2 இடங்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வெளியேறி வருகிறது.

அதைத்தொடர்ந்து கூட்டுக்குடிநீர் திட்டத்தில் நீரேற்றுதல் உடனடியாக நேற்று காலை 7 மணி முதல் நிறுத்தப்பட்டுள்ளது அதனை உடனடியாக போர்க்கால அடிப்படையில் சரி செய்து குடிநீர் வினியோகத்தை சீர் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பணிகள் அனைத்தும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இதனால், சேலம் மாவட்டத்தில் ஆட்டையாம்பட்டி, மல்லூர் மற்றும் கொங்கணாபுரம் என 3 பேரூராட்சிகளுக்கும், கொங்கணாபுரம், எடப்பாடி, மகுடஞ்சாவடி மற்றும் வீரபாண்டி ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 453 கிராம குடியிருப்புகளுக்கும் அதே போல் நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் நகராட்சி, மல்லசமுத்திரம் பிள்ளாநல்லூர் மற்றும் அத்தனூர் என 3 பேரூராட்சிகளுக்கும் மற்றும் மல்லசமுத்திரம், வெண்ணந்தூர், ராசிபுரம் ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 117 கிராம குடியிருப்புகளுக்கும் குடிநீர் வினியோகம் இன்று(வியாழக்கிழமை), நாளை(வெள்ளிக்கிழமை) என 2 நாட்கள் நிறுத்தப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ளும்படியும், மேலும் 2 நாட்களுக்கு உள்ளூரில் உள்ள நீரை பயன்படுத்திக் கொள்ளுமாறும் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு 9-ந் தேதி முற்பகல் முதல் மின்மோட்டார் இயக்கப்பட்டு குடிநீர் வினியோகம் சீர்செய்யப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story