குஜிலியம்பாறை அருகே ஊராட்சி அலுவலக கட்டிடம் கட்ட எதிர்ப்பு அதிகாரிகளை கிராம மக்கள் சிறைபிடிப்பு


குஜிலியம்பாறை அருகே ஊராட்சி அலுவலக கட்டிடம் கட்ட எதிர்ப்பு அதிகாரிகளை கிராம மக்கள் சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 7 Dec 2017 3:15 AM IST (Updated: 7 Dec 2017 1:29 AM IST)
t-max-icont-min-icon

குஜிலியம்பாறை அருகே புதிய ஊராட்சி அலுவலக கட்டிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் அதிகாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குஜிலியம்பாறை,

குஜிலியம்பாறை அருகேயுள்ள வடுகம்பாடி ஊராட்சி அலுவலகம் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக புளியம்பட்டியில் செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த கட்டிடம் சேதமடைந்ததால் புதிய கட்டிடம் கட்ட ரூ.15 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து பழைய கட்டிடத்தை இடித்து விட்டு, அதே பகுதியில் புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கியது.

இந்நிலையில் வடுகம்பாடி மக்கள் ஊராட்சி அலுவலகத்திற்கான கட்டிடத்தை தங்கள் ஊரில் தான் கட்ட வேண்டும் என கூறி பணியை தடுத்து நிறுத்தினர். இதனால் பணி நிறுத்தப்பட்டது. இதையடுத்து அப்பகுதி மக்கள் கலெக்டர் டி.ஜி.வினயிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அதேபோல் புளியம்பட்டி, தளிபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் புளியம்பட்டியில் தான் ஊராட்சி அலுவலகத்தை கட்ட வேண்டும் என கூறி கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இந்நிலையில் இது குறித்து ஆய்வு செய்வதற்கு மாவட்ட அதிகாரிகள் கடந்த வாரம் புளியம்பட்டிக்கு வர இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அங்கு அதிகாரிகள் யாரும் வராததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் குஜிலியம்பாறை ஒன்றிய அலுவலகத்துக்கு திரண்டு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் வடுகம்பாடி ஊராட்சி அலுவலகத்தை வடுகம்பாடியிலேயே கட்ட வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர். அப்போது இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி ஒரு மனதாக முடிவு செய்த பிறகே கட்டிடம் கட்டப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

ஆனால் இதுவரை எந்த பேச்சுவார்த்தைக்கும் அழைக்கவில்லை என தெரிகிறது. இந்நிலையில் புளியம்பட்டியில் ஊராட்சி அலுவலக புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்க உள்ளதாகவும், இதற்கான அளவிடும் பணியை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய வர உள்ளதாகவும் வடுகம்பாடி கிராம மக்களுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து ஆத்திரம் அடைந்த கிழக்கு மற்றும் மேற்கு வடுகம்பாடி, பாரதிநகர் உள்ளிட்ட கிராம மக்கள் சுமார் 300–க்கும் மேற்பட்டோர் நேற்று காலை ஊராட்சி அலுவலகம் இடிக்கப்பட்ட இடத்திற்கு முன்பாக தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த அலுவலக இடத்தை பார்வையிட வந்த வேடசந்தூர் உதவி செயற்பொறியாளர் பார்த்திபன், ஒன்றிய ஆணையாளர்கள் மருதமுத்து, முருகன் ஆகியோரை சிறைபிடித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த குஜிலியம்பாறை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் தரப்பில், புதிய ஊராட்சி அலுவலக கட்டிடம் கட்டும் பணியை தொடங்க கூடாது என்றும், இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய பிறகே பணியை தொடங்க வேண்டும் என்று கூறினர். இதனை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள் விரைவில் வேடசந்தூர் தாசில்தார் தலைமையில் இரு தரப்பினரையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, அதில் சுமுக முடிவு எட்டப்பட்ட பிறகே பணிகள் தொடங்கப்படும் என்றனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story