கந்துவட்டி வசூலிப்பவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்


கந்துவட்டி வசூலிப்பவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்
x
தினத்தந்தி 7 Dec 2017 3:30 AM IST (Updated: 7 Dec 2017 1:29 AM IST)
t-max-icont-min-icon

கந்துவட்டி வசூலிக்கும் பெண் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை 7–வது வார்டு நேர்நகரை சேர்ந்த பெண்கள் சிலர் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் மொத்தமாக கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் தடுத்து நிறுத்தினர்.

4 பேர் மட்டும் உள்ளே சென்று மனு கொடுக்கும்படி போலீசார் கூறினர். இதனால் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் கலெக்டர் அலுவலக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் அதிகாரிகளிடம் ஒரு புகார் மனு அளித்தனர்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:–

எங்கள் பகுதியில் உள்ள பெண்கள் பலர், ஒரு பெண்ணிடம் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளோம். இதற்காக மாதம்தோறும் வட்டியை தவறாமல் செலுத்திவிடுவோம். தவிர்க்க முடியாத காரணங்களால் சில மாதங்கள் வட்டியை செலுத்த முடியவில்லை. இதற்கு அந்த பெண் கூடுதலாக வட்டி வசூலிக்கிறார். மேலும் கடன்தொகையை முழுவதும் செலுத்திய பின்னரும் கந்துவட்டி கேட்டு மிரட்டுகிறார்.

மேலும் வட்டிக்கு பணம் வாங்கியவர்களிடம், எழுதாத பத்திரத்தில் கையெழுத்து வாங்கி கொண்டு கந்துவட்டி கேட்டு மிரட்டுகிறார். இதற்கு சிலர் அந்த பெண்ணுக்கு உடந்தையாக இருக்கின்றனர். இதனால் கந்துவட்டி வசூலிக்கும் பெண் மற்றும் அதற்கு உடந்தையாக இருப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

பின்னர் இதே கோரிக்கையை வலியுறுத்தி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் அவர்கள் புகார் அளித்தனர்.


Next Story