பொன்னேரி அருகே கொசஸ்தலை ஆற்றின் கரையை சேதப்படுத்தி மணல் கடத்தல் 2 வாகனங்கள் பறிமுதல்
பொன்னேரி அருகே கொசஸ்தலை ஆற்றின் கரையை சேதப்படுத்தி மணல் கடத்தியதாக 2 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
பொன்னேரி,
பொன்னேரி அடுத்த ஜெகநாதபுரம் கிராமத்தின் வழியாக கொசஸ்தலை ஆறு செல்கிறது. இங்கு தடுப்பணை கட்டப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கொசஸ்தலை ஆறு நீர் இன்றி வறண்டு கிடப்பதை சாதகமாக பயன்படுத்தி சிலர் ஆற்றின் கரையை சேதப்படுத்தி மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்தனர். இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லிக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து கொசஸ்தலை ஆற்று பகுதிக்கு பொன்னேரி ஆர்.டி.ஓ. முத்துசாமி, மண்டல துணை தாசில்தார் சீனிவாசன், கிராம நிர்வாக அலுவலர் மலர்விழி ஆகியோர் நேற்று கொசஸ்தலை ஆற்றுக்கு சென்றனர்.
2 வாகனங்கள் பறிமுதல்
அப்போது சிலர் ஆற்றில் இருந்து மணலை பிளாஸ்டிக் கோணிப்பைகளில் நிரப்பி மோட்டார் சைக்கிளில் எடுத்துச்சென்று, ஒரு மினிலாரியில் ஏற்றிக்கொண்டு இருந்தனர்.
அதிகாரிகளை கண்டதும் மணல் கடத்தியவர்கள் தப்பிச்செல்ல முயன்றனர். அவர்களை அதிகாரிகள் விரட்டிச்சென்றனர். உடனே அருகில் இருந்த வயலில் மினிலாரியை நிறுத்தி விட்டு கொள்ளையர்கள் தப்பிச் சென்று விட்டனர்.
இதனையடுத்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினிலாரி மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகிய 2 வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து சோழவரம் போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் சோழவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மணல் திருடியவர்களை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story