குடிநீர் வசதி செய்து தரக்கோரி 1–வது மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
குடிநீர் வசதி செய்து தரக்கோரி திருப்பூர் மாநகராட்சி 1–வது மண்டல அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் மாநகராட்சி 1–வது வார்டு கண்ணன் கோவில் வீதியில் 50–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த பகுதியில் நிலவிய குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் சில நாட்களுக்கு முன்பு புதிய குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது. ஆனால் உடனடியாக அந்த இணைப்பு துண்டிக்கப்பட்டன. இதனால் அப்பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
எனவே குடிநீர் வசதி செய்து தரக்கோரியும், அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தியும், பாரதீய ஜனதா கட்சி சார்பில் 1–வது மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. இந்தபோராட்டத்தில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்திற்கு பா.ஜனதா கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமை தாங்கினார். 1–வது மண்டல தலைவர் செல்வராஜ், பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் வேலுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை தலைவர் நடராஜ், செயலாளர் சுந்தரமூர்த்தி, 1–வது மண்டல துணை தலைவர் மலர்விழி பாபு, முன்னாள் கவுன்சிலர் நடராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது பா.ஜனதா கட்சி நிர்வாகிகள் சிலர் தரையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து மாநகராட்சி உதவி கமிஷனர் வாசுக்குமார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அடிப்படை வசதிகள் செய்து தரகோரி அவரிடம் மனு வழங்கினார்கள். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:–
தண்ணீர்பந்தல் காலனி பஸ் நிறுத்தம் அருகே பல மாதங்களாக குடிநீர் வீணாகி வருகிறது. அனுப்பர்பாளையம்புதூர் சந்திப்பில் மழைநீர் வடிகால் வசதி இல்லாததால் மழை பெய்தால் மழைநீர் ரோட்டில் குளம் போல் தேங்கி நிற்கிறது.
3–வது வார்டு செட்டிபாளையம் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்ட சுகாதார வளாகம் திறக்கப்படாமல் உள்ளது. இந்த பகுதிகளில் குடிநீர் வசதி செய்து தர வேண்டும். மேலும் அடிப்படை வசதிகள் செய்து தர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்தமனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்று கொண்ட உதவி கமிஷனர் வாசுக்குமார் அடிப்படை வசதிகள் விரைவில் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.