அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிப்பு தாதர் சைத்ய பூமியில் லட்சக்கணக்கானோர் அஞ்சலி கவர்னர், முதல்–மந்திரியும் மரியாதை
அம்பேத்கர் நினைவு நாளையொட்டி தாதர் சைத்ய பூமியில் லட்சக்கணக்கானோர் திரண்டு அஞ்சலி செலுத்தினர்
மும்பை,
அம்பேத்கர் நினைவு நாளையொட்டி தாதர் சைத்ய பூமியில் லட்சக்கணக்கானோர் திரண்டு அஞ்சலி செலுத்தினர். கவர்னர் வித்யாசாகர் ராவ், முதல்– மந்திரி தேவேந்திர பட்னாவிசும் மரியாதை செலுத்தினர்.
அம்பேத்கர் நினைவு நாள்மும்பை தாதர் சிவாஜி பார்க் கடற்கரையில் சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் நினைவிடம் அமைந்துள்ளது. சைத்ய பூமி என அழைக்கப்படும் இந்த நினைவிடத்தில் ஆண்டுதோறும் அம்பேத்கர் நினைவு நாளில் லட்சக்கணக்கான மக்கள் இங்கு திரண்டு வந்து அஞ்சலி செலுத்துவார்கள்.
இதேப்போல அரசியல் கட்சி தலைவர்களும் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்துவார்கள். இந்த ஆண்டு அம்பேத்கர் நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.
சைத்ய பூமியில் திரண்ட மக்கள்இதையொட்டி 2 நாட்களுக்கு முன்னதாகவே மராட்டியத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும், வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களும் சைத்ய பூமியில் திரண்டனர். மேலும் ஏராளமான புத்த பிட்சுகளும் வந்தனர். இந்தநிலையில் ‘ஒகி’ புயல் எதிரொலி காரணமாக மும்பையில் பெய்த திடீர் மழை அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது. பந்தல்களில் தங்கியிருந்தவர்கள் அனைவரும் உடனடியாக மாநகராட்சி பள்ளிகளில் தங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பலர் ரெயில் நிலையங்களிலும், ஆகாய நடைபாதைகள், மேம்பாலங்களின் கீழ் பகுதியிலும் தஞ்சம் அடைந்து இருந்தனர்.
மழை ஓய்ந்த நிலையில், அம்பேத்கர் நினைவு நாளான நேற்று சைத்ய பூமியில் அஞ்சலி செலுத்துவதற்காக லட்சக்கணக்கான மக்கள் திரண்டார்கள்.
இதன் காரணமாக தாதர் ரெயில் நிலையத்தில் இருந்து சைத்ய பூமி நோக்கி செல்லும் ரானடே சாலை மக்கள் வெள்ளத்தில் மிதந்தது.
முதல்–மந்திரி அஞ்சலிநேற்று காலை கவர்னர் வித்யாசாகர் ராவ், முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சைத்ய பூமி நினைவிடத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். மேலும் மாநில கல்வித்துறை மந்திரி வினோத் தாவ்டே சைத்ய பூமியில் அஞ்சலி செலுத்தினார்.
இதுதவிர மாநிலம் முழுவதும் இருந்து வந்திருந்த லட்சக்கணக்கான மக்கள் வரிசையில் காத்து நின்று அம்பேத்கர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். அம்பேத்கர் நினைவு நாளையொட்டி நேற்று நகரில் பல்வேறு பகுதிகளில் இருந்து தாதர் சிவாஜி பார்க்கிற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
பலத்த பாதுகாப்புஇதேப்போல சிவாஜிபார்க் பகுதியில் அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்த வந்த மக்களுக்கு தனியார் தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சியினர் சார்பில் உணவு பொட்டலங்கள், பிஸ்கெட்டுகள், குடிநீர் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன. மேலும் மக்களின் வசதிக்காக நடமாடும் கழிவறைகள், குடிநீர் டேங்கர் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
அம்பேத்கர் நினைவு நாளையொட்டி யொட்டி தாதர் சிவாஜி பார்க் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.