மரக்கிளைகளை சாலையின் குறுக்கே போட்டு கிராம மக்கள் மறியல் எம்.எல்.ஏ.வை காருடன் சிறைபிடித்ததால் பரபரப்பு
வெள்ளிச்சந்தை அருகே மரக்கிளைகளை சாலையின் குறுக்கே போட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது வழிவிடக்கோரிய எம்.எல்.ஏ.வை காருடன் கிராம மக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ராஜாக்கமங்கலம்,
‘ஒகி‘ புயலால் குமரி மாவட்டத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. புயல் தாக்கி ஒரு வாரத்துக்கு மேலாகியும் அதன் பாதிப்பில் இருந்து குமரி மாவட்ட மக்கள் இன்னும் மீளவில்லை. இதனால் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் மின்சாரம், குடிநீர் வசதியின்றி பொதுமக்கள் அல்லோலப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலைமையை சீரமைக்கக்கோரி தினமும் மறியல் போராட்டம் நடந்து வருகிறது. இந்தநிலையில் வெள்ளிச்சந்தை அருகே பேயோடு சந்திப்பில் சரல், சூரப்பள்ளம் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் நேற்று காலையில் மின்சாரம், குடிநீர் வசதி கேட்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களால் சாலையின் குறுக்கே மரக்கிளைகள் போடப்பட்டது.
போராட்டத்தின் போது அந்த வழியாக வந்த 6 அரசு பஸ்களையும், தனியார் வாகனங்களையும் சிறைபிடித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த வெள்ளிச்சந்தை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர்.
இதற்கிடையே மறியல் போராட்டம் நடந்த வழியாக வந்த பத்மநாபபுரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வான மனோ தங்கராஜ் காரில் வந்தார். அவருடைய காரும் போராட்டத்தில் சிக்கியது.
உடனே காரில் இருந்து கீழே இறங்கி வந்த மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ., போலீசாரிடம் சென்று மரக்கிளைகளை அகற்றி வழி ஏற்படுத்தி தரக்கூறியதாக தெரிகிறது. அதற்கு போலீசார், பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டுள்ளதால் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளனர்.
உடனே போலீசாருக்கும், மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ.வுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை கவனித்த பொதுமக்கள், எம்.எல்.ஏ.வுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். நிலைமையை அறிந்த மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ., காருடன் பின்னோக்கி சென்றுள்ளார். ஆனால் பொதுமக்கள் காரை சுற்றி வளைத்து செல்ல விடாமல் தடுத்தனர். காருடன் எம்.எல்.ஏ. சிறைபிடிக்கப்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, போராட்டத்திற்கு ஏற்பட்ட இடையூறுக்கு வருத்தம் தெரிவிப்பதாக மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ. கூறினார். இதில் சமாதானமடைந்த பொதுமக்கள், அவருக்கு வழிவிட்டனர்.
மேலும் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கரன் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இரவுக்குள் மின்சாரம் வழங்கப்படும் என்று உறுதி அளித்ததையடுத்து அவர்கள் மறியலையும் கைவிட்டனர்.