108 ஆம்புலன்சுக்கான டிரைவர், மருத்துவ உதவியாளர் தேர்வு தூத்துக்குடியில், நாளை நடக்கிறது
தூத்துக்குடியில், 108 ஆம்புலன்சுக்கான டிரைவர் மற்றும் மருத்துவ உதவியாளர் தேர்வு நாளை(சனிக்கிழமை)நடக்கிறது.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில், 108 ஆம்புலன்சுக்கான டிரைவர் மற்றும் மருத்துவ உதவியாளர் தேர்வு நாளை(சனிக்கிழமை)நடக்கிறது.
இதுகுறித்து 108 ஆம்புலன்சு சேவை ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
ஆட்கள் தேர்வு108 ஆம்புலன்சு சேவைக்கான மருத்துவ உதவியாளர்கள், டிரைவர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான தேர்வு நாளை(சனிக்கிழமை) காலை கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நடக்கிறது. தேர்வு செய்யப்படுபவர்கள் தமிழ்நாட்டில் எந்த பகுதியிலும் நியமனம் செய்யப்படுவார்கள். 12 மணி நேர ஷிப்ட் முறையில் பணி ஒதுக்கப்படும்.
தகுதிகள்டிரைவர் பணிக்கு 10–ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண்கள் விண்ணப்பிக்கலாம். நேர்முகத்தேர்வு அன்று 23–35 வயதுக்குள் இருக்க வேண்டும். 162.5 சென்டி மீட்டர் உயரத்துக்கு குறையாமல் இருக்க வேண்டும். இலகுரக ஓட்டுநர் உரிமம் மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் வைத்து இருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் பெற்று 3 ஆண்டுகளும், பேட்ஜ் வாகன உரிமம் பெற்று குறைந்தபட்சம் ஒரு ஆண்டுகள் நிறைவு பெற்று இருக்க வேண்டும். இந்த தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் தங்களுடைய கல்வி, ஓட்டுநர் உரிமம் மற்றும் அனுபவம் தொடர்பான அனைத்து அசல் சான்றிதழ்களையும் சரிபார்ப்புக்காக கொண்டு வர வேண்டும். மாத ஊதியம் ரூ.11 ஆயிரத்து 100 வழங்கப்படும்.
மருத்துவ உதவியாளர்மருத்துவ உதவியாளர் பணிக்கு பி.எஸ்.சி, நர்சிங், தாவரவியல், உயிரியல், பயோகெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி, தாவர உயிரியல், டி.பார்ம் உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 20 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். எழுத்து தேர்வு, மருத்துவ நேர்முகத் தேர்வு, மனிதவளத்துறையின் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 50 நாட்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி, ஆஸ்பத்திரி மற்றும் ஆம்புலன்சு சார்ந்த நடைமுறை பயிற்சிகளும் அளிக்கப்படும். பயிற்சி காலத்தில் தங்கும் வசதி மற்றும் தினசரி உணவுக்காக ரூ.100 படியும் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.