திருவேற்காட்டில் மழைநீர் கால்வாயில் கழிவுநீர் விடப்படுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம்
திருவேற்காட்டில் மழைநீர் கால்வாயில் திறந்துவிடப்படும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பூந்தமல்லி,
ஆவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவேற்காடு நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. கோவில் நகரங்களில் மிக முக்கியமான பகுதியாக திருவேற்காடு விளங்கி வருகிறது. மேலும் தொழிற்சாலைகள், தனியார் குடோன்கள் என அதிக அளவில் இங்கு உள்ளது.
திருவேற்காடு நகராட்சிக் குட்பட்ட 8-வது வார்டு நூம்பல் பகுதியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளும், வெளிநாடுகளுக்கு பொருட்களை அனுப்பும் பெரிய குடோன்களும் இயங்கி வருகிறது.
இந்த பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் நிறுவனங்களில் இருந்து லாரிகளில் சேகரிக்கப்படும் மனித கழிவுகள் மற்றும் கழிவுநீரை, நூம்பல் வேலப்பன்சாவடி சாலையில் உள்ள மழைநீர் கால்வாயில் விடுகின்றனர்.
தொற்றுநோய் பரவும் அபாயம்
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
நூம்பல்-வேலப்பன்சாவடியை இணைக்கும் சாலையில் மழைநீர் கால்வாய் கட்டப்பட்டு உள்ளது. இந்த கால்வாயில் அந்த பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் நிறுவனங்களில் இருந்து பெறப்படும் கழிவுநீர் மற்றும் மனித கழிவுகளை லாரிகளில் கொண்டு வந்து திறந்து விடுகின்றனர்.
இதனால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு மழைநீர் செல்ல வழி இல்லாமல் வெளியே வருகிறது. மேலும் மழைக்காலங்களில் மழை நீரோடு கழிவுநீரும் கலந்து துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. மேலும், தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது.
கண்டுகொள்வதில்லை
இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மற்றும் திருவேற்காடு நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நகராட்சி அதிகாரிகள் இதனை ஒரு பொருட்டாக கண்டுகொள்வதே இல்லை.
இனியும் அரசு அதிகாரிகள் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால், கழிவுநீர் லாரிகளை சிறைபிடித்து நகராட்சி அலுவலக வளாகத்திற்கு கொண்டுசென்று கழிவுநீரை ஊற்ற உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story