அம்பேத்கர் பேனர் கிழிப்பு: 2-வது நாளாக சாலை மறியல் போராட்டம் பா.ம.க.வினர் திரண்டதால் பரபரப்பு


அம்பேத்கர் பேனர் கிழிப்பு: 2-வது நாளாக சாலை மறியல் போராட்டம் பா.ம.க.வினர் திரண்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 8 Dec 2017 4:30 AM IST (Updated: 8 Dec 2017 1:16 AM IST)
t-max-icont-min-icon

அடுக்கம்பாறை அருகே அம்பேத்கர் பேனர் கிழிக்கப்பட்டதை கண்டித்து நேற்று 2-வது நாளாக பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பா.ம.க.வினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அடுக்கம்பாறை,

அடுக்கம்பாறையை அடுத்த மூஞ்சூர்பட்டு காலனியில் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு அங்குள்ள அம்பேத்கர் சிலை அருகே கடந்த 5-ந் தேதி பேனர் வைக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் காலையில் அந்த பேனர் கிழிக்கப்பட்டிருந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

அவர்களை வேலூர் தாலுகா போலீசார் சமாதானம் செய்து, பேனரை கிழித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். அதைத்தொடர்ந்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

பின்னர் நேற்று முன்தினம் இரவு மீண்டும் புதிதாக அம்பேத்கர் படத்துடன் பேனர் வைக்கப்பட்டது. போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. ஆனாலும் புதிதாக வைக்கப்பட்ட பேனரையும் யாரோ கிழித்துவிட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப்பகுதி பொதுமக்கள் நேற்று 2-வது நாளாக மீண்டும் சாலைமறியல் போராட்டம் நடத்தினர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியம், தாசில்தார் பாலாஜி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பேனரை கிழித்தவர்களை கண்டுபிடித்து அவர்களை கைது செய்யவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

அதைத்தொடர்ந்து பா.ம.க. பிரமுகர் கரிகாலன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் பொது இடத்தில் பேனர் வைப்பதால் அடிக்கடி தகராறு ஏற்படுகிறது என்றும், எனவே இந்த இடத்தில் பேனர் வைக்க அனுமதி வழங்கக்கூடாது எனவும் வலியுறுத்தினர்.

இதனை தொடர்ந்து வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் பேனரை அகற்றி எடுத்து சென்றனர். பா.ம.க. சார்பில் வைக்கப்பட்டிருந்த கொடிகம்பமும் அங்கிருந்து அகற்றப்பட்டது. 

Next Story