பாதி அளவே நிரம்பிய ஏரிகள்: புழல் ஏரிக்கரையில் கொட்டப்படும் கழிவுகளால் பாதிப்பு
புழல், சோழவரம் ஏரிகள் பாதி அளவே நிரம்பியுள்ளன. புழல் ஏரிக்கரையில் கொட்டப்படும் கழிவுகளால் சுகாதார கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
செங்குன்றம்,
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளில் முக்கியமானது புழல் ஏரி. 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்டது. கடந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் ஏரி வறண்டது. இந்த ஆண்டு ஓரளவு மழை பெய்ததால் ஏரி நிரம்பிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.
தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்த போதிலும் இந்த ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதியில் தேவையான மழை பெய்யவில்லை. இந்த ஆண்டு பருவமழை முடியும் காலத்தை நெருங்கிவிட்டதால் இனி இந்த ஏரிகள் நிரம்புவதற்கு வாய்ப்பு உள்ளதா என்பது சந்தேகமே. இப்போதைக்கு இந்த ஏரிகளில் பாதி அளவுக்கே தண்ணீர் நிரம்பி உள்ளது.
குப்பையால் கேடு
புழல் ஏரியில் 1,685 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 142 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. சென்னை நகர மக்களின் குடிநீருக்காக வினாடிக்கு 84 கனஅடி தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு அனுப்பப்படுகிறது.
புழல் ஏரியின் கரையோரம் செங்குன்றம் பேரூராட்சியின் 18 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பை, கழிவுகள் மற்றும் கோழி கழிவுகள் கொட்டப்பட்டு மலைபோல் குவிந்துள்ளது. இந்த குப்பை கழிவு களால் ஏரியில் உள்ள தண்ணீர் மாசுபடவும் வாய்ப்பு உள்ளது. அந்த பகுதியில் சுகாதார கேடும் ஏற்படுகிறது. எனவே இந்த குப்பைகளை அகற்ற வேண்டும் என மாவட்ட கலெக்டரிடமும், முதல்- அமைச்சரிடமும் கோரிக்கை வைத்தும் பலனில்லை என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் குற்றம்சாட்டி உள்ளனர்.
சோழவரம் ஏரி
இதேபோல சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1,081 மில்லியன் கனஅடி. ஏரியில் 596 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து இல்லை. சோழவரம் ஏரிக்கரையில் லேசான விரிசல் ஏற்பட்டு தண்ணீர் கசிந்து வருகிறது. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story