திருவள்ளூர் அருகே பஸ்-ஆட்டோ மோதல்; 10 பேர் காயம்
திருவள்ளூர் அருகே ஷேர் ஆட்டோவும் லாரியும் மோதியதில் 10 பேர் காயமடைந்தனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் இருந்து தனியார் கல்லூரி பஸ் மாணவிகளை ஏற்றிக்கொண்டு திருவள்ளூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் திருவள்ளூரை அடுத்த சிறுவானூர் கண்டிகையில் மாணவிகளை ஏற்றுவதற்காக சாலையோரம் நிறுத்தப்பட்டது. அப்போது புல்லரம்பாக்கத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஷேர் ஆட்டோ ஒன்று திருவள்ளூர் நோக்கி வந்து கொண்டிருந்தது.
அந்த ஷேர் ஆட்டோ டிரைவரான புல்லரம்பாக்கத்தை சேர்ந்த கோபி (வயது 28) அந்த பஸ்சை முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிரே திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டை நோக்கி லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இதனால் பதறிப்போன ஆட்டோ டிரைவர் நிலைதடுமாறி அந்த கல்லூரி பஸ்சின் பின்னால் மோதினார். இதில் ஆட்டோ டிரைவர் கோபி, ஆட்டோவில் பயணம் செய்த புல்லரம்பாக்கத்தை சேர்ந்த டில்லியம்மாள் (28), அவரது குழந்தை ஜஸ்வந்த் (3), சுகன்யா (22), ராணியம்மாள் (63), பார்வதி (30), ரவி (35), யஸ்வந்த்(5), தருண்குமார் (14), முத்துமணி (35) என 10 பேர் காயம் அடைந்தனர். இதை பார்த்த அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் சுகன்யா மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து புல்லரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story