தண்ணீரை முறையாக பயன்படுத்தி மண் வளத்தை காக்க வேண்டும் கலெக்டர் பேச்சு
தண்ணீரை முறையாக பயன்படுத்தி மண் வளத்தை காக்க வேண்டும் என்று கலெக்டர் சுந்தரவல்லி தெரிவித்தார்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் சுந்தரவல்லி தலைமையில் உலக மண் வள தினவிழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் வேளாண்மை சார்ந்த பொருட்களின் கண்காட்சியில் மாவட்டத்தின் மண்வகைகள் களர், உவர் மற்றும் அமில மண் வகைகள், பசுந்தாள் உரங்களான வேம்பு, புங்கம், கிளிரிசிடியா, தக்கைப்பூண்டு தளைகள், நூண்ணூட்டச்சத்து உரங்கள், மண்புழு உரம், உயிரினபூச்சி கொல்லிகளான டிரைகோ டெர்மா விரிடி மற்றும் பயிர்களின் நுண்ணூட்டச்சத்து குறைபாடு அறிகுறிகளான படங்கள் போன்றவை கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது.
பின்னர் விழாவில் கலெக்டர் பேசியதாவது:-
தற்போது வடகிழக்கு பருவமழையால் கிடைத்துள்ள தண்ணீரை முறையாக பயன்படுத்தி மண்ஆய்வு செய்து மண்வளத்தை காக்க வேண்டும்.
மண் வள அட்டைகள்
திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் அனைவரும் தமிழக அரசு விவசாயிகளுக்காக வழங்கும் அனைத்து திட்டங்களையும், வேளாண்மைத்துறை வழங்கும் அனைத்து தொழில்நுட்பங்களையும் சரிவர பயன்படுத்தி அதிகஅளவில் உற்பத்தியை பெருக்க வேண்டும். தமிழகத்திலேயே திருவள்ளூர் மாவட்டத்தை விவசாயத்தில் முதன்மை மாவட்டமாக கொண்டு வரவேண்டும்.
மேலும் கடந்த ஆண்டு தேசிய மண்வள அட்டை இயக்கத்தின் கீழ் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 976 விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டு 90 ஆயிரத்து 144 விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்கான நோக்கத்துடன் மண்மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) தேவேந்திரசிங் பாரிக்கர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொறுப்பு) பிரதாபராவ், வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) எபினேசன், வேளாண்மை உதவி இயக்குனர் கலாதேவி மற்றும் அரசு அலுவலர்கள், திரளான வேளாண்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story