ஒரத்தி அருகே வாலிபர் மர்மசாவு: உறவினர்கள் சாலை மறியல்


ஒரத்தி அருகே வாலிபர் மர்மசாவு: உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 8 Dec 2017 4:00 AM IST (Updated: 8 Dec 2017 1:41 AM IST)
t-max-icont-min-icon

அச்சரப்பாக்கத்தை அடுத்த ஒரத்தியில் வாலிபரின் மர்ம மரணம் குறித்து விசாரிக்க வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல்.

அச்சரப்பாக்கம்,

அச்சரப்பாக்கத்தை அடுத்த ஒரத்தி புறங்கால் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது21). இவர் கூடுவாஞ்சேரியில் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். அவர் அந்த பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்ததாக கூறப்படுகிறது. இதை அந்த பெண்ணின் தாத்தா சின்னப்பையன் உள்ளிட்டோர் கண்டித்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த 25-ந்தேதி பாண்டியன் ஊருக்கு வந்தபோது, நண்பர்களுடன் அவர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. மறுநாள் காலையில் அவர் மயக்க நிலையில் கிடந்தார். அவரை அங்கிருந்தவர்கள் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பாண்டியன் கடந்த 4-ந்தேதி இறந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக பாண்டியனின் தந்தை வேலு, ஒரத்தி போலீசில் புகார் அளித்தார். அதில் சின்னப்பையன் உள்ளிட்ட 3 பேரை விசாரிக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார். அதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை அழைத்து விசாரணை நடத்தினார்கள்.

இந்த நிலையில் பாண்டியனின் தந்தை வேலு மற்றும் உறவினர்கள் நேற்று மாலை 6 மணி அளவில் ஒரத்தி சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பாண்டியனின் மர்ம மரணம் குறித்து விசாரிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினார்கள். அவர்களுடன் போலீசார் சமரசம் பேசி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள். இதைத்தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். 

Next Story