கிருஷ்ணகிரி அணையை முறையாக பராமரிக்காத அதிகாரிகளை கண்டித்து, பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம்


கிருஷ்ணகிரி அணையை முறையாக பராமரிக்காத அதிகாரிகளை கண்டித்து, பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Dec 2017 4:15 AM IST (Updated: 8 Dec 2017 1:43 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி அணையை முறையாக பராமரிக்காத அதிகாரிகளை கண்டித்து பா.ம.க. சார்பில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஜி.கே.மணி கலந்து கொண்டார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், கிருஷ்ணகிரி அணையை முறையாக பராமரிக்காத அதிகாரிகளை கண்டித்து பா.ம.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் சுப.குமார் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் மேகநாதன், வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் கணேசன், இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் தமிழ்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய மாவட்ட செயலாளர் அர்ச்சுனன் வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டு பேசியதாவது:-

கிருஷ்ணகிரி அணை இந்த மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது. இந்த அணையின் முதல் மதகில் உள்ள ஷட்டர் உடைந்து தண்ணீர் முழுவதும் வீணாகி உள்ளது. இதனால் 12 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு விவசாயிகள் தண்ணீருக்காக காத்திருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், இன்னும் இரண்டு மாதங்களில் மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு குடிநீர் பிரச்சினையும் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நிலையில் அணையின் ஷட்டர் உடைந்து தண்ணீர் முழுவதும் வீணாகி உள்ளது. தமிழக அரசுக்கு கிருஷ்ணகிரி அணை குறித்து அக்கறை இல்லை. கிருஷ்ணகிரி அணையின் பிரதான மதகில் உள்ள ஷட்டர் உடைந்ததற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்கவில்லை. உடைந்த மதகின் முன்பு தற்காலிக கதவை பொருத்தி வீணாகிப்போன தண்ணீரை சேமித்திருக்கலாம். அதற்கான தொழில்நுட்ப வசதி இல்லையா?

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வறட்சி ஏற்பட்ட போதும், கிருஷ்ணகிரி அணையில் மட்டும் நீர் நிரம்பி இருந்தது. தற்போது வீணாக செல்லும் தண்ணீரை எண்ணேகொல்புதூர்-தும்பலஅள்ளி கால்வாய் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் மூலம் தண்ணீரை சேமித்திருக்கலாம். அதை நிறைவேற்றாததால் தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளது.

கிருஷ்ணகிரி அணையின் மதகு உடைய என்ன காரணம்? அணையை பராமரிக்க எவ்வளவு செலவு செய்யப்பட்டது? அணையில் இருந்து எவ்வளவு தண்ணீர் வெளியேறியுள்ளது? இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் எத்தனை பேர்? என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும். 8 நாட்களை கடந்தும் உடைந்த மதகை சரி செய்யவில்லை. மதகை உடனே சரிசெய்து தண்ணீரை தேக்கவில்லை என்றால், அடுத்த கட்டமாக பா.ம.க. சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு ஜி.கே.மணி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் மதகு உடைந்ததற்கு காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை டுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் முன்னாள் மாநில துணை பொதுச் செயலாளர் மாதேஸ்வரன், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மேற்கு மாவட்ட செயலாளர் அருண்ராஜன், மாவட்ட துணை செயலாளர் தங்கம் வெங்கடேசன், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் மஞ்சு, உழவர் பேரியக்க தலைவர் சிவக்குமார், திம்மராயன், பெருமாள் உள்ளிட்ட ஒன்றிய செயலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர தலைவர் பூபதி நன்றி கூறினார்.

முன்னதாக பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி, படேதலாவ் ஏரி மற்றும் கிருஷ்ணகிரி அணையில் உடைந்த மதகு ஆகியவற்றை பார்வையிட்டார்.


Next Story