முன்னாள் படைவீரர்களுக்காக கேண்டீன் வசதி ஏற்படுத்த நடவடிக்கை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி உறுதி


முன்னாள் படைவீரர்களுக்காக கேண்டீன் வசதி ஏற்படுத்த நடவடிக்கை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி உறுதி
x
தினத்தந்தி 8 Dec 2017 4:00 AM IST (Updated: 8 Dec 2017 2:09 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்களுக்காக கேண்டீன் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி கூறினார்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக் டர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர்கள் நலத்துறையின் மூலம் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினரை கவுரவிக்கும் வகையில் கொடிநாள் தினம் நடை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி கலந்து கொண்டு முன்னாள் படைவீரர் குடும்பத்தினர் 12 பேருக்கு ரூ.1 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:- முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களை சார்ந்தோர் நலன் பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் கொடிநாள் தினம் கொண்டாடப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் பங்கு கொண்டு நிதி அளிக்க வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2016-ம் ஆண்டு ரூ.65 லட்சத்து 19 ஆயிரத்து 700 இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ரூ.1 கோடியே 21 லட்சத்து 98 ஆயிரம் வசூல் செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சியாகும்.

நடப்பு ஆண்டில் ரூ.71 லட்சத்து 71 ஆயிரத்து 700 இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைப்போல் இந்த ஆண்டும் அனைவரும் தாராளமாக நிதி வழங்க வேண்டும். முன்னாள் படைவீரர்களின் பிரதான கோரிக்கையாக கேண்டீன் வசதி கேட்டுக்கொண்டனர். இதுதொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். முன்னாள் படைவீரர்கள், அவர்களுடைய குடும்பத்தினர் தங்கள் கோரிக்கை தொடர்பாக எப்போது வேண்டுமென்றாலும் அலுவலகத்தில் வந்து தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் படைவீரர் நல அலுவலக கண்காணிப்பாளர் இளங்கோவன், முப்படை வீரர் வாரிய உப தலைவர் கர்னல் ராமகிருஷ்ணன், முன்னாள் படைவீரர் நல அலுவலக அமைப்பாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கொடிநாள் நிதி வழங்கி, வசூலை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தொடங்கி வைத்தார்.

Next Story