ஓமலூர் பகுதியில் அனுமதியின்றி இயங்கிய 14 சாயப்பட்டறைகள் இடித்து அகற்றம்


ஓமலூர் பகுதியில் அனுமதியின்றி இயங்கிய 14 சாயப்பட்டறைகள் இடித்து அகற்றம்
x
தினத்தந்தி 8 Dec 2017 4:30 AM IST (Updated: 8 Dec 2017 2:29 AM IST)
t-max-icont-min-icon

ஓமலூர் பகுதியில் அனுமதியின்றி இயங்கிய 14 சாயப்பட்டறைகள் இடித்து அகற்றப்பட்டது.

ஓமலூர்,

ஓமலூரை அடுத்த எம்.செட்டிப்பட்டி, பஞ்சுகாளிப்பட்டி, காளிக்கடை ஆகிய பகுதிகளில் உள்ள பட்டுத்தறி கூடங்களில் அனுமதியின்றி சாயப்பட்டறைகள் அமைக்கப்பட்டு இயங்கி வருவதாக சுற்றுச்சூழல் துறையினருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, சேலம் மாவட்ட சுற்றுச்சூழல் துறை பொறியாளர் பாண்டியன், உதவி பொறியாளர்கள் ரெங்கராஜ், விசுவநாதன் மற்றும் ஊ.மாரமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் கீர்த்தி ஆகியோர் இந்த பகுதிகளில் உள்ள பட்டுத்தறி கூடங்களில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது எம்.செட்டிப்பட்டி பகுதியில் உள்ள 5 பட்டுத்தறி கூடங்களிலும், பஞ்சுகாளிப்பட்டி பகுதியில் உள்ள 7 கூடங்களிலும், காளிக்கடை பகுதியில் உள்ள 2 கூடங்களிலும் அனுமதியின்றி சாயத்தொட்டிகள் அமைத்து சாயப்பட்டறைகள் செயல்பட்டு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அனுமதியின்றி இயங்கி வந்த அந்த 14 சாயப்பட்டறைகளையும் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதேபோல் அனுமதியின்றி செயல்படும் சாயப்பட்டறைகள் குறித்து புகார்கள் வந்தால் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

Next Story