காதல் திருமண ஜோடி ஆஜர்; உறவினர்கள் திரண்டதால் பரபரப்பு போலீஸ் குவிப்பு


காதல் திருமண ஜோடி ஆஜர்; உறவினர்கள் திரண்டதால் பரபரப்பு போலீஸ் குவிப்பு
x
தினத்தந்தி 8 Dec 2017 6:00 AM IST (Updated: 8 Dec 2017 3:00 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் கோர்ட்டில் காதல் திருமண ஜோடியினர் நேற்று ஆஜர், பெண்ணின் உறவினர்கள் கோர்ட்டு வளாகத்தில் திரண்டதால் போலீசார் குவிக்கப்பட்டனர்.

கடலூர்,

வடலூர் அருகே உள்ள மருவாய் கிராமத்தைச்சேர்ந்த பழனிவேல்ராஜன் என்பவருடைய மகன் எழில்(வயது19). இவர் சிதம்பரத்தில் உள்ள பாலிடெக்னிக்கில் பட்டயப்படிப்பு படித்து வருகிறார். அதே ஊரைச்சேர்ந்த வேல்முருகன் என்பவரின் மகள் தமிழ்செல்வி(21) சி.முட்லூரில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். ஒரே ஊரைச்சேர்ந்தவர்கள் என்பதால் எழிலுக்கும், தமிழ்செல்விக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் படிப்புக்காக ஒரே பஸ்சில் சென்று வந்தபோது, இந்த பழக்கம் காதலாக மாறியது.

இவர்களது காதலுக்கு தமிழ்செல்வியின் வீட்டாரிடம் இருந்து எதிர்ப்பு வந்தது. ஏனெனில் இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள். ஆனால் சாதியை கடந்து இருவரும் திருமணம் செய்வது என்று முடிவு செய்தனர். இதையடுத்து கடந்த 1-ந்தேதி இருவரும் ஊரைவிட்டு வெளியேறினார்கள்.

தமிழ் செல்வி மாயமானது பற்றி அவரது உறவினர்கள் வடலூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் இருவரையும் போலீசார் தேடி வந்தனர். இதற்கிடையே எழில், தமிழ்செல்வியை கரைமேட்டில் உள்ள கோவிலுக்கு நேற்று முன்தினம் அழைத்துச்சென்று தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார். இதற்கிடையே தங்களை போலீசார் தேடுவதை அறிந்த இருவரும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். தமிழ் செல்வியின் உறவினர்கள் ஏற்கனவே போலீசில் புகார் செய்திருந்ததால், இருவரையும் கடலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்த வடலூர் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையிலான போலீசார் நேற்று அழைத்து வந்திருந்தனர்.

இதனால் தமிழ்செல்வியின் உறவினர்கள் கோர்ட்டுக்கு திரண்டு வந்தனர். அவர்கள் கோர்ட்டு வாசலில் நின்ற தமிழ்செல்வியை திட்டி மிரட்டல் விடுத்தனர். இதனால் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. காதல் திருமண ஜோடியினர் வெவ்வேறு சாதிகளைச்சேர்ந்தவர்களானதால், அந்த கும்பலை வெளியேற்றுமாறு போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து அந்த கும்பலை போலீசார் வெளியேற்றினார்கள். எனினும் காதல் திருமண ஜோடி கோர்ட்டில் இருந்து வெளியே செல்லும் போது அசம்பாவிதம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் துணை போலீஸ் சூப்பிரண்டு சிட்டிபாபு தலைமையில் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் கவியரசன், பழனிவேல் மற்றும் ஏராளமான போலீசார் கோர்ட்டு வளாகத்தில் குவிக்கப்பட்டனர். இதனால் பரபரப்பு நிலவியது.

இதன்பின் பிற்பகலில் எழிலையும், தமிழ் செல்வியையும் நீதிபதி ராஜேஷ் கண்ணா முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினார்கள். அப்போது தமிழ்செல்வி தனது காதல் கணவர் எழிலுடன் செல்ல விருப்பம் தெரிவித்தார். அதனால் இருவரும் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Next Story