செல்பி மோகத்தால் விபரீதம்: வைகை ஆற்றில் தவறி விழுந்த சிறுவனின் கதி என்ன?


செல்பி மோகத்தால் விபரீதம்: வைகை ஆற்றில் தவறி விழுந்த சிறுவனின் கதி என்ன?
x
தினத்தந்தி 8 Dec 2017 3:59 AM IST (Updated: 8 Dec 2017 3:59 AM IST)
t-max-icont-min-icon

வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டதைத் தொடர்ந்து மதுரை வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

மதுரை,

நீண்ட காலத்துக்குப் பிறகு வைகை ஆற்றில் தண்ணீர் செல்வதை கோரிப்பாளையம் பாலத்தில் இருந்தும், ஆழ்வார்புரம் பகுதியில் நின்றும் மக்கள் ரசித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் பழனியைச் சேர்ந்த ஆசிரியர் ராமகிருஷ்ணன் தனது மகன் ஜெயசூரியா (வயது 14) மற்றும் குடும்பத்தினருடன் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்காக வந்தார். அப்போது ஜெய சூரியா தனது உறவினரான கல்லூரி மாணவர் கோகுலகிருஷ்ணனுடன் மதுரை வைகை ஆற்று வெள்ளத்தை பார்ப்பதற்காக சென்றுள்ளான்.

ஆழ்வார்புரம் பகுதியில் கரையோரத்தில் நின்று இருவரும் செல்போனில் செல்பி எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக இருவரும் வைகை ஆற்றில் தவறி விழுந்தனர். இதை பார்த்ததும் அங்கிருந்த பொதுமக்கள் விரைந்து சென்று தண்ணீரில் தத்தளித்த கோகுல கிருஷ்ணனை மீட்டனர். ஆனால் ஜெயசூரியாவை அவர்களால் மீட்க முடியவில்லை.

உடனே இது குறித்து மதிச்சியம் போலீசார் மற்றும் தல்லாகுளம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து ஆழ்வார்புரம் பகுதி வைகை ஆற்றுப் பகுதியில் ஜெயசூரியாவை தேடி பார்த்தனர். தண்ணீர் வேகமாக செல்வதால் தீயணைப்பு வீரர்களையும் ஆற்றின் நீர் இழுத்துச் சென்றது. எனவே தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி ஆற்றின் உள்ளே சென்று இரவு 7 மணி வரை தேடி பார்த்தும் சிறுவனை மீட்க முடியவில்லை. ஆகவே தண்ணீரில் மூழ்கிய ஜெயசூரியாவின் நிலை என்னவென்று தெரியவில்லை. மகனை காணாததை கண்டு அவரது பெற்றோர் ஆற்றங்கரையில் கதறி அழுதபடி காத்திருந்த காட்சி அனைவரின் மனதையும் சோகத்தில் ஆழ்த்தியது.

Next Story