திருமண பத்திரிகை கொடுப்பதுபோல் நடித்து பெண்ணிடம் நூதன முறையில் நகை கொள்ளை


திருமண பத்திரிகை கொடுப்பதுபோல் நடித்து பெண்ணிடம் நூதன முறையில் நகை கொள்ளை
x
தினத்தந்தி 9 Dec 2017 3:45 AM IST (Updated: 9 Dec 2017 1:16 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணிடம் நூதன முறையில் ரூ.3 லட்சம் நகை கொள்ளை மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

வேலூர்,

வேலூர் விருப்பாட்சிபுரம் காமராஜர் நகரை சேர்ந்தவர் குணசீலன். தனியார் நிறுவன ஊழியர். இவருடைய மனைவி மீராலட்சுமி (வயது34). குணசீலன் நேற்று முன்தினம் மாலையில் வெளியே சென்றிருந்தார். மீராலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது டிப்டாப் ஆசாமிகள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர்.

அவர்கள் குணசீலனின் வீட்டுக்கு சென்று திருமண பத்திரிகை கொடுக்க வந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இதை நம்பிய மீராலட்சுமி அந்த நபர்களை வீட்டுக்குள் வர அனுமதித்துள்ளார். வீட்டுக்குள் சென்றதும் அவர்கள் இருவரும் மீராலட்சுமியின் கழுத்தில் கத்தியைவைத்து மிரட்டி உள்ளனர்.

பின்னர் பீரோவில் இருந்த நகை, மீராலட்சுமி அணிந்திருந்த நகை என சுமார் 16 பவுன் நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றுவிட்டனர். மர்ம நபர்கள் வெளியே சென்றதும் மீராலட்சுமி கூச்சலிட்டார். பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் வருவதற்குள் மர்ம நபர்கள் இருவரும் சென்றுவிட்டனர். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு சுமார் ரூ.3 லட்சம் ஆகும்.

இதுகுறித்து மீராலட்சுமி பாகாயம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன முறையில் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story