பெருங்களத்தூர் ரெயில் நிலையம் அருகே கிடப்பில் போடப்பட்ட மேம்பால பணிகளால் போக்குவரத்து நெரிசல்
சென்னையை அடுத்த பெருங்களத்தூர் ரெயில் நிலையம் அருகில் கிடப்பில் போடப்பட்ட மேம்பால பணிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
தாம்பரம்,
சென்னை புறநகர் பகுதிகளில் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வரும் பகுதி பெருங்களத்தூர். இந்த பகுதியில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பஸ்கள் செல்வதாலும், வெளி மாவட்டங்களில் இருந்து தாம்பரம் பைபாஸ் சாலை வழியாக செல்லும் பஸ்களில் இருந்து பெருங்களத்தூரில் தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து இறங்குகின்றனர்.
இதனால் பெருங்களத்தூர் பஸ் நிலைய பகுதி எப்போதும் வாகன நெரிசலுடன் பரபரப்பாக காணப்படுகிறது. இந்த பகுதியில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை செய்து வருவதால் பெரிய நகரத்திற்கு இணையாக வளர்ந்து வரும் பகுதியாக பெருங்களத்தூர் உள்ளது.
பெருங்களத்தூர் ரெயில் நிலையமும் பஸ் நிலையத்திற்கு அருகே உள்ளது. சென்னையில் வேலை பார்க்கும் ஆயிரக்கணக்கான அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் பெருங்களத்தூர் ரெயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
மேம்பால பணிகள் நிறுத்தம்
பெருங்களத்தூர் ரெயில் நிலையத்தில் ஜி.எஸ்.டி சாலையில் இருந்து பீர்க்கன்காரணை பேரூராட்சி மற்றும் பெருங்களத்தூர் பேரூராட்சி பகுதிகளுக்கு செல்ல ரெயில் நிலையத்தின் வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் 2 ரெயில்வே கேட்கள் இருந்தன. இந்த ரெயில்வே கேட் வழியாக தினமும் ஏராளமானோர் ஜி.எஸ்.டி சாலைக்கு வந்து தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் மார்க்கத்தில் தங்கள் பணிகளுக்கு சென்று வந்தனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெருங்களத்தூர் ரெயில் நிலையத்தின் வடக்கு பகுதியில் இருந்த ரெயில்வே கேட் மூடப்பட்டு அங்கு பெருங்களத்தூர் மேற்கு பகுதியை ஜி.எஸ்.டி சாலையுடன் இணைக்கும் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணிகளை ரூ.76 கோடி மதிப்பீட்டில் நெடுஞ்சாலைத்துறை தொடங்கியது. முதலில் ரெயில்வே தண்டவாளங்கள் உள்ள பகுதியில் மட்டும் பணிகள் நடைபெற்று வந்தது. அந்த பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது மேம்பால பணிகளை நெடுஞ்சாலை துறை எந்த காரணமும் சொல்லாமல் நிறுத்தி உள்ளது.
போக்குவரத்து நெரிசல்
அந்த பகுதியில் இருக்கும் ஒரே ரெயில்வே கேட் வழியாக பெருங்களத்தூர் புத்தர்நகர், ஆர்.எம்.கே நகர், பாரதி நகர், குறிஞ்சி நகர், காந்தி நகர், பார்வதி நகர், விவேக் நகர், பாலாஜி நகர், டேவிட் நகர், மூவேந்தர் நகர் மற்றும் பீர்க்கன்காரணையை சேர்ந்த சீனிவாசா நகர், சக்தி நகர், உமா நகர், அமுதம் நகர், ஏஎஸ் ராஜம் நகர் பகுதிகளை சேர்ந்த மக்கள் தினமும் சென்று வருகின்றனர்.
அடிக்கடி அந்த ரெயில்வே கேட் மூடப்படுவதால் கடும் அவதிபட்டு வருகின்றனர். மூடியிருக்கும் ரெயில்வே கேட் நீண்ட நேரம் திறக்கப்படாமல் இருக்கும் நேரத்தில் கேட்டின் கம்பி வழியே உட்புகுந்து வாகன ஓட்டிகள் பலர் ஆபத்தான முறையில் செல்ல முயல்கின்றனர். இதனால் உயிரிழப்பு ஏற்படும் அபாய நிலை உள்ளது.
பொதுமக்கள் குற்றச்சாட்டு
பல நேரங்களில் ½ மணி நேரத்திற்கும் மேலாக ரெயில்வே கேட் மூடப்பட்டு இருப்பதால் ஜி.எஸ்.டி சாலையில் வாகனங்கள் அணி வகுத்து நிற்பதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
இந்த மேம்பால பணிகளை தொடங்காமல் நெடுஞ்சாலைத்துறை கிடப்பில் போட்டுள்ளதாகவும், முன்கூட்டியே முறையாக திட்டமிடாமல் பயன்படுத்தி வந்த ரெயில்வே கேட்டையும் மூடி விட்டனர்.
ரெயில்வே தரப்பு தங்கள் பணிகளை பெரும்பாலும் முடித்து விட நெடுஞ்சாலை துறையினர் அதற்கான ஆயத்த பணிகளை கூட துவக்காமல் உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அதிகாரிகள் சொல்வது என்ன?
இது தொடர்பாக நெடுஞ்சாலை துறையினரிடம் கேட்ட போது பாலம் அமைக்க நிலம் கையகபடுத்தும் பணிகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் முழு அனுமதி ஆகியவற்றிற்காக தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும் தெரிவித்தனர்.
இந்த ரெயில்வே மேம்பால பணிகளை விரைவாக தொடங்கி முடிக்க வேண்டும் என்பதே பெருங்களத்தூர் பகுதி மக்களின் கோரிக்கை. இதனை தமிழக அரசு நிறைவேற்றுமா?
Related Tags :
Next Story