கல்லூரி மாணவனை தாக்கி செல்போனை பறித்த வாலிபருக்கு தர்மஅடி 2 பேர் தப்பி ஓட்டம்


கல்லூரி மாணவனை தாக்கி செல்போனை பறித்த வாலிபருக்கு தர்மஅடி 2 பேர் தப்பி ஓட்டம்
x
தினத்தந்தி 9 Dec 2017 4:00 AM IST (Updated: 9 Dec 2017 2:12 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் கல்லூரி மாணவனை தாக்கி செல்போனை பறித்த வாலிபருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர். திருட்டு கும்பலில் 2 பேர் தப்பி ஓடினார்கள்.

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் வாலிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மகன் தருண் (வயது 18). இவர் ஈரோடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பார்ம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். தருண் தினமும் கல்லூரிக்கு ரெயிலில் சென்று வருவார். நேற்று மாலை வழக்கம் போல கல்லூரி முடிந்து ரெயிலில் வந்த தருண் திருப்பூர் ரெயில் நிலையத்தில் இறங்கியுள்ளார். பின்னர் அங்கிருந்து தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஊத்துக்குளி ரோட்டில் உள்ள புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலம் அருகே தருண் நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென 3 பேர் கொண்ட கும்பல் தருணை தாக்கியுள்ளனர்.

பின்னர் அவரின் பாக்கெட்டில் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி செல்ல முயற்சித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த தருண் ‘திருடன் திருடன்’ என்று கூச்சலிட்டுள்ளார். சத்த கேட்ட அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டு செல்போனை பறித்து கொண்டு ஓடிய 3 பேரையும் விரட்டி பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால் அதில் 2 பேர் தப்பி ஓடி விட்டனர். அதில் ஒருவர் மட்டும் பொதுமக்கள் பிடியில் மாட்டிக்கொண்டார். அந்த நபரை பொதுக்கள் சேர்ந்து அடித்து உதைத்தனர். அந்த நபரிடம் நடத்திய விசாரணையில், அவருடன் வந்து தப்பி ஓடிய கூட்டாளிகள் 2 பேரும் திருப்பூர் லட்சுமி நகரில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருப்பதாக தெரிவித்தார்.

இதையடுத்து பொதுமக்கள் பிடிபட்ட அந்த நபரை அழைத்து கொண்டு லட்சுமிநகரில் உள்ள சம்பந்தப்பட்ட விடுதிக்கு சென்றனர். ஆனால் அவர்கள் இருவரும் அங்கு இல்லை. இதுகுறித்து பொதுமக்கள் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த நபரை பொதுமக்கள் பிடியில் இருந்து மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அவர் சிதம்பரத்தை அடுத்த காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்த ஜெய்கணேஷ் என்பது தெரியவந்தது.

மேலும், தன்னுடன் வந்தவர்கள் சென்னையை சேர்ந்த வெங்கடேஷ் மற்றும் தினேஷ் என்றும் தெரிவித்தார். இந்த நிலையில் செல்போனை பறித்த சம்பவத்தில் பொதுமக்களிடம் பிடிபட்ட ஜெய்கணேஷ் ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு லட்சுமிநகரில் வைத்து அதே பகுதியை சேர்ந்த என்ஜினீயர் வெங்கடேஷ் (38) என்பவரின் செல்போனை திருடியவன் என்பதும் போலீசாருக்கு தெரியவந்தது. இதேபோல், அந்த பகுதியை சேர்ந்த மேலும் பலர் தங்களிடமும் செல்போனை பறித்து சென்ற கும்பல் இதுதான் என்று கூறி போலீஸ் நிலையத்தில் குவிந்தனர். பிடிபட்ட ஜெய்கணேசிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story