போக்குவரத்து நெரிசலால் சிக்கி திணறும் வண்டலூர்- செங்கல்பட்டு நெடுஞ்சாலை
வண்டலூர்- செங்கல்பட்டு நெடுஞ்சாலை போக்குவரத்து நெரிசலால் சிக்கி திணறுகிறது.
வண்டலூர்,
10 ஆண்டுகளுக்கு முன்பு போக்குவரத்து நெரிசல் என்று நாம் பார்த்தால், அது சென்னை அண்ணா சாலை, சைதாப்பேட்டை, கிண்டி, தாம்பரம் போன்ற முக்கிய இடங்களில் மட்டுமே காலை, மற்றும் மாலை நேரங்களில் இருக்கும். இந்த போக்குவரத்து நெரிசல்களையும் சில மணி நேரத்தில் போக்குவரத்து போலீசார் சரி செய்துவிடுவார்கள். தீபாவளி, பொங்கல் போன்ற முக்கிய நாட்களில் தி.நகர் போன்ற இடங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும். ஆனால் புறநகர் பகுதியான சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் என்பது இருக்கவே இருக்காது.
ஆனால் தற்போது சென்னை புறநகர் பகுதியான சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, மறைமலைநகர், சிங்கபெருமாள்கோவில், செங்கல்பட்டு ஆகிய ஊர்கள் அசுர வேகத்தில் வளர்ந்து சென்னைக்கு அடுத்தப்படியாக அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட நெருக்கடியான பகுதியாக மாறியுள்ளது. மேலும் தொழிற்சாலைகள், என்ஜினீயரிங் கல்லூரிகள், மருத்துவக்கல்லூரிகள், கலை-அறிவியல் கல்லூரிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. வண்டலூர் உயிரியல் பூங்கா போன்ற முக்கிய சுற்றுலா தலங்கள், பெரிய ஓட்டல்கள், வணிக நிறுவன கடைகளும் அதிக எண்ணிக்கையில் இருக்கிறது.
மனவேதனை அடைகின்றனர்
சென்னை கோயம்பேடு புறநகர் பஸ் நிலையம் மற்றும் சென்னையில் இருந்து தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் தென் மாவட்டங்களை நோக்கி செல்கிறது. இதனால் சென்னை புறநகர் பகுதியான வண்டலூர் முதல் செங்கல்பட்டு வரையான பகுதியில் போக்குவரத்து நெரிசல் தினமும் இரவு வரை நீடிக்கிறது. குறிப்பாக பெருங்களத்தூர், வண்டலூர் உயிரியல் பூங்கா, கூடுவாஞ்சேரி சிக்னல், ஆகிய பகுதிகளை வாகன ஓட்டிகள் ஆமை வேகத்தில் கடப்பதற்கு பல மணி நேரம் ஆகிறது. அப்படியே இந்த பகுதியை கடந்துவிட்டால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் தனது சொந்த ஊருக்கு சென்றது போல் நிம்மதி அடைகின்றனர்.
இதுவே முக்கிய பண்டிகை நாட்களில் ஊருக்கு செல்ல வேண்டும் என்றால் காலையிலேயே கோயம்பேடு பஸ் நிலையத்தில் பஸ் ஏறினால் பரனூர் சுங்கச்சாவடியை தாண்டுவதற்கு பல மணி நேரம் ஆகிவிடுகிறது. இதனால் பஸ், கார், வேன் போன்ற வாகனங்களில் அமர்ந்து பயணம் செய்யும் பொதுமக்கள் கூட மிகுந்த மனவேதனை அடைகின்றனர்.
இதுமட்டுமின்றி இந்த பகுதிகளில் சின்ன விபத்துகள் ஏற்பட்டால் கூட போக்குவரத்து நெரிசலுக்கு பஞ்சமே இருக்காது, அன்றைய தினம் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல வேண்டிய இடத்திற்கு பொதுமக்கள் செல்லமுடியாது என்பது நிதர்சனமான உண்மையாகும். மேலும் காயம் அடைந்தவர்களை காப்பாற்ற ஆம்புலன்ஸ் வாகனம் கூட விபத்து நடந்த இடத்திற்கு சில மணி நேரம் கழித்துதான் பல சிரமத்திற்கு பிறகு வந்து சேரும், இதன் காரணமாக சில சமயங்களில் காயம் அடைந்தவர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்து விடுவது வேதனைக்குறியது ஆகும். மேலும் தென் மாவட்டங்களில் இருந்து அவசர சிகிச்சைக்காக சென்னை ஆஸ்பத்திரிக்கு செல்லும் ஆம்புலன்ஸ் உரிய நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு செல்லமுடியவில்லை, இதனால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இந்த போக்குவரத்து நெரிசல் காரணமாக தினமும் சரசாரியாக 2 பேர் சாலை விபத்தில் உயிரிழக்கின்றனர்.
போக்குவரத்து போலீசார்
இன்றைய காலகட்டத்தில் அனைவரும் கார், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்கள் வைத்து இருப்பது அத்தியாவசியமான பொருளாக மாறியுள்ளது. குடியிருப்புகள் பெருகி வருவது போல் வாகனங்களும் நாளுக்கு நாள் பெருகி வருவதன் காரணமாக இந்த பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை சரி செய்வதற்கு போதிய அளவில் போக்குவரத்து போலீசார் பணியில் இல்லை, ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் 6 போக்குவரத்து போலீசார் மட்டுமே பணியில் உள்ளனர். இவர்கள் வண்டலூர் உயிரியல் பூங்கா, கூடுவாஞ்சேரி சிக்னல் போன்ற பகுதியில் மட்டுமே காலை மற்றும் மாலை நேரங்களில் பணியில் உள்ளனர்.
முக்கியமாக பொதுமக்கள் அதிக அளவில் சாலையை கடக்கும் இடங்களில் போக்குவரத்து போலீசார் நிற்பது இல்லை. இதற்கு முக்கிய காரணம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் போது போக்குவரத்தை ஒழுங்கு செய்வதில் கடுமையான சவால்களை போக்குவத்து போலீசார் சந்திக்க வேண்டியுள்ளது. குறைந்த எண்ணிக்கையில் போக்குவரத்து போலீசார் உள்ளதால,் அவர்களே பல்வேறு பணிகளை கவனிக்க வேண்டியிருக்கிறது. இதனால் தினமும் போக்குவரத்து போலீசார் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி விடுகிறனர். சில சமயங்களில் நீண்ட நேரம் பணியில் இருப்பதால் சோர்வடைந்து விடுகின்றனர். அப்போது போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில்லை, இதனால் பொதுமக்கள் தங்கள் விருப்பப்படி சாலையை கடக்கும் போது விபத்துகள் அதிகரிக்கிறது. போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
மேம்பால பணிகள்
இந்த பகுதியில் உள்ள முக்கியமான இடங்களில் தானியங்கி சிக்னல் இல்லை. ஒரு சில இடங்களில் இருக்கும் சிக்னல் கூட சரியான முறையில் வேலை செய்வதில்லை, இந்த சாலைகளில் பழுதடைந்த சிக்னல்களை சரி செய்வதற்கு உயர் போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை, மேலும் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை மற்றும் சர்வீஸ் சாலைகளில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களை சர்வீஸ் சாலையிலே நிறுத்திவிடுகின்றனர். இதனை போக்குவரத்து போலீசார் கண்டுகொள்வதில்லை,
சென்னை-திருச்சி நெடுஞ்சாலையை இணைக்கும் வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையின் மேம்பால பணிகள் பல ஆண்டு காலமாக வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே நடந்து வருகிறது. மேம்பாலத்தின் ஒரு பகுதி மட்டும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மற்றொரு பகுதியில் பாலம் கட்டும் பணி மந்தமாக நடந்து வருகிறது. இதே போல கிளாம்பாக்கம் மேம்பாலம் பணியும் பல ஆண்டு காலமாக அரை குறையாக காணப்படுகிறது. கூடுவாஞ்சேரி மாடம்பாக்கம் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கபட்டுள்ளது. ஆனால் மாடம்பாக்கத்தில் இருந்து வரும் வாகனங்கள் கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி. சாலையில் இணைக்கும் பணி இன்னும் முழுமையாக நடக்கவில்லை, இதே போல சிங்கபெருமாள்கோவில் ஆறுவழி பாதையின் மேம்பாலப்பணிகள் பல ஆண்டுகளாக அப்படியே கிடப்பில் உள்ளது. இதனை பற்றி அதிகாரிகள் யாரும் இதுவரை கண்டு கொள்ளவில்லை
இது குறித்து பொதுமக்கள் கருத்து கூறுகையில்:-
இந்த சாலையில் உள்ள கட்டிமுடிக்காத பாலங்களை விரைந்து கட்டி முடிக்கவேண்டும், ஊரப்பாக்கம் பள்ளிக்கூட பஸ் நிறுத்தம், காரணைப்புதுச்சேரி கூட்ரோடு, கூடுவாஞ்சேரி மீன் மார்க்கெட் போன்ற பகுதியில் பொதுமக்கள் சாலையை கடப்பதற்கு வசதியாக சுரங்க நடைபாதை அமைக்க வேண்டும், கூடுவாஞ்சேரி சிக்னல் அருகே மேம்பாலம் அமைக்க வேண்டும், முக்கியமான சாலை சந்திப்பு இடங்களில் தானியங்கி சிக்னல்கள் அமைக்க வேண்டும், காலை, மதியம், மாலை, இரவு ஆகிய நேரங்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கும், அதிக எண்ணிக்கையில் போக்குவரத்து போலீசாரை நியமிக்க வேண்டும், சர்வீஸ் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், தாம்பரம்-செங்கல்பட்டு வரை அறிவிக்கப்பட்ட மேல்மட்ட சாலை அமைக்கும் பணியை மத்திய-மாநில அரசுகள் வரும் 2018-ம் ஆண்டு தொடக்கத்திலே பணியை தொடங்க வேண்டும் அப்போது தான் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
போலீஸ் உயர் அதிகாரி கூறியதாவது:-
சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் தினமும் லட்சக்கணக்கான எண்ணிக்கையில் வாகனங்கள் செல்கிறது. இதன் காரணமாக தான் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கூடுவாஞ்சேரி போக்குவரத்து பிரிவுக்கு போலீசாரின் எண்ணிக்கை மிகவும் குறைவு, 25-க்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசார் இருக்க வேண்டிய இடத்தில் 5 பேர் மட்டுமே தற்போது பணியில் உள்ளனர். இவர்களே தொடர்ந்து பணி செய்யும் போது உடலில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. போக்குவரத்து போலீசில் இருந்தவர்கள் பலர் ஒய்வு பெற்றுவிட்டனர். தற்போது புதிதாக தேர்வு செய்யப்பட்ட போலீசாருக்கு பயிற்சி நடந்து வருகிறது. இந்த பயிற்சி இன்னும் சில மாதங்களில் நிறைவு பெற்றவுடன் வண்டலூரில் இருந்து செங்கல்பட்டு வரை போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு போக்குவரத்து போலீசார் அதிக எண்ணிக்கையில் அரசு நியமிக்கும் என்று நாங்கள் எதிர்பாக்கிறோம், அதுவரை பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும்.
இவ்வாறு உயர் போலீஸ் அதிகாரி கூறினார்.
Related Tags :
Next Story