வைகையாற்று தடுப்பணையில் குளித்த 2 பேரின் கதி என்ன?
சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் வைகையாற்று தடுப்பணையில் குளித்த 2 பேரின் கதி என்ன? தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
சோழவந்தான்,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள எம்.புதுப்பட்டியைச் சேர்ந்தவர்கள் சுரேஷ் (வயது 32), பிரபு (27). இவர்கள் பெயிண்டிங் வேலை பார்த்து வந்தனர். இந்தநிலையில் நேற்று மாலை 2 பேரும் முள்ளிபள்ளம் வைகையாற்று தடுப்பணையில் குளித்து கொண்டு இருந்தனர். அப்போது 2 பேரையும் தண்ணீர் இழுத்து சென்றது. இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் இருவரையும் காப்பாற்ற முயன்று முடியாததால், சோழவந்தான் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
அதைத்தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், போலீசார் உதவியுடன் 2 மணிநேரம் வைகையாற்று தடுப்பணை பகுதியில் தேடி வந்தனர். ஆனால் 2 பேரின் உடலை கண்டுபிடிக்க பிடிக்க முடியவில்லை. இந்தநிலையில் உடலை கண்டுபிடிக்க கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசாரின் சமரச பேச்சை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.
தொடர்ந்து முள்ளிப்பள்ளம் வைகையாற்று தடுப்பணையிலிருந்து மேலக்கால் பாலம் வரை சோழவந்தான், காடுப்பட்டி போலீசார் மற்றும் சோழவந்தான் தீயணைப்பு படையினர் தண்ணீர் இழுத்து சென்ற 2 பேரின் உடலை தேடி வருகின்றனர். இதில் சுரேஷ் என்பவருக்கு கனகா என்ற மனைவியும் 2 மகள்களும், பிரபுவுக்கு மாரியம்மாள் என்ற மனைவியும் ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.