ஆளில்லா குட்டி விமானம் மூலம் வனவிலங்குகள் கண்காணிப்பு


ஆளில்லா குட்டி விமானம் மூலம் வனவிலங்குகள் கண்காணிப்பு
x
தினத்தந்தி 9 Dec 2017 4:00 AM IST (Updated: 9 Dec 2017 3:10 AM IST)
t-max-icont-min-icon

கேமராக்கள் பொருத்தப்பட்ட ஆளில்லா குட்டி விமானம் மூலம் வனவிலங்குகள் கண்காணிக்கப்படுகிறது.

கன்னிவாடி,

கன்னிவாடி வனச்சரகத்துக்கு உட்பட்ட போலியமனூர் வனப்பகுதியில் ஆளில்லா குட்டி விமானம் பறந்தது. அதன் சத்தம் கேட்டு வனப்பகுதியை ஒட்டி வசிக்கிற மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து பார்த்தனர். 3 மணி நேரத்துக்கும் மேலாக அந்த குட்டி விமானம் வனப்பகுதியில் வட்டமிட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து விசாரித்தபோது, வனத்துறையினரே குட்டி விமானத்தை பறக்க விட்டது தெரியவந்தது. வனத்துறை திட்ட இயக்குனர் ஜெகதீஷ் தலைமையிலான வனத்துறையினர் அதனை பறக்க விட்டுள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

வனப்பகுதியையொட்டி வசிக்கிற மக்களுக்கு வனவிலங்குகளால் அடிக்கடி தொல்லை ஏற்படுகிறது. இதனால் வனவிலங்குகளின் நடமாட்டத்தை முன்கூட்டியே கண்காணித்து, அதனை வனப்பகுதியில் விரட்டும் நோக்கத்தில் மாவட்டந்தோறும் ஆளில்லா குட்டி விமானம் வனத்துறைக்கு வழங்கப்பட உள்ளது. ரிமோர்ட் மூலம் இந்த விமானம் இயக்கப்படும்.

ஒரு அடி நீளம், அகலம் கொண்ட அந்த விமானத்தில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 500 அடி உயரம் வரை விமானம் பறக்கும். 5 கிலோமீட்டர் சுற்றளவுக்கு குட்டி விமானம் புகைப்படம் எடுக்கும். அதனை தரைப்பகுதியில் இருந்தவாறே பார்த்து கொள்ளலாம்.

பறப்பதற்கு ஏற்ற சூழல் இல்லையென்றால், இயக்கப்பட்ட இடத்துக்கு தாமாகவே விமானம் தரை இறங்கி விடும். வனவிலங்குகளை கண்காணிப்பது மட்டுமின்றி மரம் கடத்தல், நக்சலைட்டுகள் பதுங்கல், வனவிலங்குகளை வேட்டையாடுதல் போன்ற குற்றச்சம்பவங்களையும் தடுக்க முடியும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் சோதனை ஓட்டமாக முதன் முறையாக கன்னிவாடி வனச்சரகத்தில் குட்டிவிமானம் பறக்க விடப்பட்டுள்ளது. இனிவருங்காலத்தில் அனைத்து வனப்பகுதிகளும் குட்டி விமானம் மூலம் கண்காணிக்கப்படும்.
இவ்வாறு வனத்துறையினர் தெரிவித்தனர்.



Next Story