ஆத்தூர், சித்தையன்கோட்டை பகுதியில் 2 ஆண்டுகளுக்கு பிறகு நெல் சாகுபடி
ஆத்தூர், சித்தையன்கோட்டை பகுதிகளில் 2 ஆண்டுகளுக்கு பிறகு விவசாயிகள் நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.
செம்பட்டி,
ஆத்தூர், சித்தையன்கோட்டை, நரசிங்கபுரம் பகுதியில் முக்கிய தொழிலாக விவசாயம் இருக்கிறது. இந்த பகுதிகளில் உள்ள தாமரைக்குளம், கருங்குளத்தின் மூலம் ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக முறையாக மழை பெய்யவில்லை.
இதனால் குளங்கள் தண்ணீரின்றி வறண்டன. மேலும் விவசாய நிலங்களும் தரிசு நிலங்களாக காட்சியளித்தன. கடந்த 2 ஆண்டுகளாக இந்த பகுதிகளில் நெல்சாகுபடி நடக்காததால் அதனை நம்பியிருந்த விவசாயிகள், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். இந்தநிலையில் இந்த ஆண்டு ஆத்தூர் பகுதிகளில் பருவமழை பரவலாக பெய்தது. இதையொட்டி தாமரைக்குளம், கருங்குளத்துக்கு நீர்வரத்து ஏற்பட்டது.
இதனை பயன்படுத்தி விவசாயிகள் நெல் சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆத்தூரில் இருந்து சித்தையன்கோட்டை செல்லும் வழியில் பச்சைக்கம்பளம் விரித்தது போல் வயல்கள் காட்சியளிக்கின்றன. ஒரு சில பகுதிகளில் நடவு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து ஆத்தூரை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், இந்த பகுதிகளில் உள்ள குளங்களுக்கு, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் மழைநீர் வருகிறது. இதன்மூலம் நெல் சாகுபடி தீவிரமாக நடக்கிறது. 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறைந்த காலத்தில் விளையும் வகையில் புதிய ஒட்டு ரகங்களை சாகுபடி செய்யப்பட்டுள்து. இதனால் அதிக மகசூல் கிடைக்கும் என்றனர்.