பிரதமர் மோடிக்கு எதிராக போர்க்கொடி பா.ஜனதா எம்.பி. திடீர் ராஜினாமா கட்சியில் இருந்தும் விலகினார்


பிரதமர் மோடிக்கு எதிராக போர்க்கொடி பா.ஜனதா எம்.பி. திடீர் ராஜினாமா கட்சியில் இருந்தும் விலகினார்
x
தினத்தந்தி 9 Dec 2017 4:15 AM IST (Updated: 9 Dec 2017 3:31 AM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய பண்டாரா- கோண்டியா தொகுதி பா.ஜனதா எம்.பி. நானா பட்டோலே பதவியை ராஜினாமா செய்ததுடன், கட்சியில் இருந்தும் விலகினார்.

புதுடெல்லி,

கடந்த பாராளுமன்ற தேர்தலில் மராட்டிய மாநிலம் பண்டாரா- கோண்டியா பாராளுமன்ற தொகுதியில் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட்டு, வெற்றி பெற்றவர் நானா பட்டோலே.

அதிருப்தி

கடந்த சில மாதங்களாகவே இவர் பிரதமர் மோடியின் மீதும், முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மீதும் கடும் அதிருப்தியில் இருந்து வந்தார்.

மேலும், விவசாயிகளின் பிரச்சினையை பிரதமர் மோடியிடம் முறையிட முயன்றபோது, அவர் கடும் எரிச்சல் அடைந்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில், சமீபத்தில் அகோலாவில் பா.ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான யஷ்வந்த் சின்கா, மராட்டிய அரசுக்கு எதிராக மேற்கொண்ட தர்ணா போராட்டத்தில், அவருக்கு பக்கபலமாக நானா பட்டோலே செயல்பட்டார். இதனால், பா.ஜனதா வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ராஜினாமா

இந்த சூழலில், நேற்று நானா பட்டோலே திடீரென தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதையொட்டி, டெல்லியில் பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜனை சந்தித்த அவர், ராஜினாமா கடிதத்தை அவரிடம் சமர்ப்பித்தார். எம்.பி. பதவியை மட்டுமின்றி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுவதாக அதில் நானா பட்டோலே குறிப்பிட்டிருக்கிறார்.

அத்துடன், மராட்டியத்தில் விவசாயிகள் தற்கொலை, பொருளாதாரம், வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட 14 பிரச்சினைகள் குறித்து பிரதமர் மோடியின் கவனத்துக்கு எடுத்து சென்றதாகவும், ஆனால் அவை அனைத்தும் புறக்கணிக்கப்பட்டு விட்டதாகவும், அதன் காரணமாகவே இந்த முடிவை எடுத்ததாகவும் அந்த கடிதத்தில் நானா பட்டோலே குறிப்பிட்டு உள்ளார்.

விவசாய குடும்பம்

54 வயதான நானா பட்டோலே, பண்டாரா மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினராக தனது அரசியல் வாழ்வை தொடங்கியவர். சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த இவர், பொதுமக்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் குரல் கொடுத்து, அவற்றுக்கு தீர்வு காண முயற்சிப்பவர் என்று அனைவராலும் அறியப்பட்டவர்.

கடந்த 1999, 2004 சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் சார்பில் பண்டாரா மாவட்டம் லாகந்தூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு, நானா பட்டோலே எம்.எல்.ஏ. ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2008-ம் ஆண்டு குளிர்கால கூட்டத்தொடரின் போது, கிழக்கு விதர்பா விவசாயிகளின் பிரச்சினைகளை சட்டசபையில் எழுப்பிய போது, அரசுக்கும், அவருக்கும் முட்டிக்கொண்டது.

இதனால், காங்கிரசில் இருந்து விலகிய அவர், எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்தார்.

பிரபுல் பட்டேலை தோற்கடித்தார்

பின்னர், 2009-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் சுயேச்சையாக களமிறங்கினார். எனினும், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பிரபுல் பட்டேலிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

இதைத்தொடர்ந்து, 2014-ம் ஆண்டில் பாரதீய ஜனதாவில் சேர்ந்த நானா பட்டோலே, அதே ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், பண்டாரா- கோண்டியா தொகுதியில் தன்னை எதிர்த்து களம் கண்ட தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான பிரபுல் பட்டேலை 1 லட்சத்து 49 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில், தோற்கடித்து பாராளுமன்றத்துக்குள் நுழைந்தார்.

பேட்டி


ராஜினாமா குறித்து நானா பட்டோலேயிடம் நிருபர்கள் கருத்து கேட்டதற்கு, “விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு பா.ஜனதா அரசு செவிசாய்க்க மறுக்கிறது. இந்த அரசின் தவறான கொள்கைகளை நான் எப்போதும் எதிர்ப்பவன். இதற்காக கட்சி என் மீது என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எடுக்கட்டும். அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை” என்றார்.

பிரதமர் மோடிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய நானா பட்டோலே, திடீரென எம்.பி. பதவியை ராஜினாமா செய்து இருப்பது பா.ஜனதா தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story