உணவு விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு


உணவு விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு
x
தினத்தந்தி 9 Dec 2017 11:30 AM IST (Updated: 9 Dec 2017 10:57 AM IST)
t-max-icont-min-icon

உணவு விளம்பரங்களில் ‘இயற்கை’, ‘பாரம்பரியம்’, ‘புத்தம் புதிய’, ‘அசல்’ உள்ளிட்ட வார்த்தைகளை பயன் படுத்த மத்திய அரசு சில கட்டுப்பாடுகளை விதிக்க பரிசீலித்து வருகிறது.

ணவு விளம்பரங்களில் ‘இயற்கை’, ‘பாரம்பரியம்’, ‘புத்தம் புதிய’, ‘அசல்’ உள்ளிட்ட வார்த்தைகளை பயன் படுத்த மத்திய அரசு சில கட்டுப்பாடுகளை விதிக்க பரிசீலித்து வருகிறது. இதுகுறித்த வரைவு அறிக்கையை இந்திய பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, பிரெஷ் (புத்தம் புதிய) என்னும் வார்த்தையை கழுவுவது, உரிப்பது, குளிரவைப்பது உள்ளிட்ட அடிப்படை செயல்பாடுகளை மட்டும் மேற்கொள்ளும் பொருட்களுக்கே பயன்படுத்த வேண்டும். உணவுப் பொருட்கள் கெட்டுப்போகாமல் இருக்கப் பயன்படுத்தப்படும் பதனப்பொருட்கள் இருந்தாலோ, பதப்படுத்துவது, கிட்டங்கியில் வைக்கப்படுவது உள்ளிட்ட சப்ளை சங்கிலித்தொடர் நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டாலோ ‘புத்தம் புதிதாக பேக் செய்யப்பட்டது’ என்ற வார்த்தையை கொண்டு விளம்பரப்படுத்தக்கூடாது.

‘இயற்கையான’ என்ற வார்த்தையை, தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிரிகள் அல்லது தாதுக்கள் மூலம் பெறப்படும் உணவுப் பொருட்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். முக்கியமாக அதில் மற்ற வேதிப்பொருட்களின் கலப்பு இருக்கக்கூடாது. அத்துடன் கூட்டு உணவுப்பொருட்களுக்கு ‘இயற்கையான’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தக்கூடாது. தேவையெனில் ‘இயற்கையான மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டது’ என்று விளம்பரப்படுத்தலாம்.

‘பாரம்பரியமான’ என்னும் வார்த்தை, அடிப்படையான பொருட்கள் அல்லது தலைமுறைகளாக இருந்துவரும் பொருட்களுக்கான தயாரிப்பு நடைமுறை, அந்தப் பொருளின் தன்மை குறிப்பிட்ட சில காலத்துக்கு மாறாததாக இருக்கும்பட்சத்தில் மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும். ‘அசலான’ என்னும் வார்த்தையை, உணவின் ஆரம்ப புள்ளியை கண்டறிந்த பிறகு உருவாக்கப்படும் உணவுகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். அவை காலத்தால் மாறிவிடும் தன்மையை பெற்றிருக்கக்கூடாது. அத்துடன் முக்கிய மூலப்பொருட்களுக்கு பதிலாக வேறு பொருட்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட உணவுகளுக்கு அந்த வார்த்தையைப் பயன்படுத்த முடியாது.

இந்த கட்டுப்பாடுகள் எல்லாம் அந்த வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், இவற்றையெல்லாம் நமது தயாரிப்பு நிறுவனங்கள் கடைபிடிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Next Story