தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4 ஆயிரத்து 453 வழக்குகளுக்கு தீர்வு
திருச்சி மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4 ஆயிரத்து 453 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதில் 66 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கு ஒன்றும் முடிவுக்கு வந்தது.
திருச்சி,
திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று காலை திருச்சி மாவட்ட நீதிமன்றங்களில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு தலைமை தாங்கினார். திருச்சி, மணப்பாறை, முசிறி, லால்குடி ஆகிய நீதிமன்றங்களில் மொத்தம் 23 அமர்வுகள் நடைபெற்றன.
இதில் நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்கு, குற்றவியல் வழக்கு, ஜீவனாம்ச வழக்கு, காசோலை மோசடி, மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு, நில ஆர்ஜித வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் இருந்து மொத்தம் 13 ஆயிரத்து 793 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் 4 ஆயிரத்து 453 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் உரியவர்களுக்கு இழப்பீடாக ரூ.14 கோடியே 89 லட்சத்து 67 ஆயிரத்து 407 பெற்று தரப்பட்டது.
திருச்சி முதலாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் கடந்த 1951–ம் ஆண்டு முதல் நிலுவையாக இருந்து வந்த பாகப்பிரிவினை வழக்கானது, மனுதாரர் மற்றும் எதிர் மனுதாரர்கள் இடையே சமரசமாக தீர்வு காணப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கானது, சென்னை உயர்நீதிமன்றத்திலும், டெல்லி உச்சநீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்யப்பட்டு என 66 ஆண்டுகள் நிலுவையில் இருந்து, தற்போது திருச்சியில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் இந்த வழக்கு சமரசம் அடைந்து முடிவுற்றது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான கீதா செய்திருந்தார்.