போட்டி தேர்வை எதிர்கொள்ள பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு கூட்டம் நடத்த வேண்டும் கலெக்டர் வெங்கடேஷ் பேச்சு
போட்டி தேர்வை எதிர்கொள்ள பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு கூட்டம் நடத்த வேண்டும் என்று கலெக்டர் வெங்கடேஷ் பேசினார்.
தூத்துக்குடி,
போட்டி தேர்வை எதிர்கொள்ள பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு கூட்டம் நடத்த வேண்டும் என்று கலெக்டர் வெங்கடேஷ் பேசினார்.
ஆய்வு கூட்டம்தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கல்வி துறை சார்பான ஆய்வு கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதா முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கலெக்டர் வெங்கடேஷ் பேசும் போது கூறியதாவது;–
நடைபெற்று முடிந்த காலாண்டு தேர்வு தேர்ச்சி விகிதம் குறித்து பள்ளிவாரியாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பள்ளிகளின் உள்கட்டமைப்பு, அடிப்படை தேவைகள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து துறை அதிகாரிகள் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.
போட்டி தேர்வுஅரசு பள்ளிகளில் கூடுதலாக தேவைப்படும் வசதிகள் விரைவாக ஏற்படுத்திக் கொடுத்திட வேண்டும். பிளஸ்–2 மாணவ– மாணவிகளுக்கு தமிழக அரசால் நடத்தப்பட்டு வரும் போட்டித்தேர்விற்கான சிறப்பு மையங்கள் சிறந்த முறையில் செயல்பட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் படிக்கும் மாணவ– மாணவிகள் அனைத்து வகை போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் சிறப்பு கூட்டம் நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அனைவருக்கும் கல்வி இயக்கம், அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு, ஆலோசனைகள் வழங்கினார். இந்த ஆய்வு கூட்டத்தில், மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.