ராதாபுரம் அருகே பள்ளி மாணவன் குளத்தில் மூழ்கி சாவு நண்பர்களுடன் குளித்தபோது பரிதாபம்


ராதாபுரம் அருகே பள்ளி மாணவன் குளத்தில் மூழ்கி சாவு நண்பர்களுடன் குளித்தபோது பரிதாபம்
x
தினத்தந்தி 10 Dec 2017 2:00 AM IST (Updated: 10 Dec 2017 12:32 AM IST)
t-max-icont-min-icon

ராதாபுரம் அருகே நண்பர்களுடன் குளித்த பள்ளி மாணவன் குளத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்தான்.

ராதாபுரம்,

ராதாபுரம் அருகே நண்பர்களுடன் குளித்த பள்ளி மாணவன் குளத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்தான்.

பள்ளி மாணவன்

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள சிதம்பராபுரத்தை சேர்ந்தவர் முருகேசன். கூலி தொழிலாளியான இவருடைய மனைவி அமல அரசு. இவர்களுக்கு 3 மகன்கள். இவர்களில் கடைசி மகன் அசோக்குமார் என்ற மீனாட்சி செல்வம்(வயது 11). மூன்று பேரும் சிதம்பராபுரத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் படித்து வருகின்றனர். இவர்களில் அசோக்குமார் 5–ம் வகுப்பு படித்து வந்தான். சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக ஊருக்கு மேற்கே உள்ள குளத்தில் தண்ணீர் பெருகி கிடக்கிறது.

இந்த நிலையில் நேற்று பள்ளிக்கூட விடுமுறை என்பதால், அசோக்குமார் தனது நண்பர்களுடன் மதியம் 12 மணி அளவில் குளத்தில் குளிக்கச் செல்வதாக வீட்டில் கூறிவிட்டுச் சென்றான். அங்கு அனைவரும் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அசோக்குமார் எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்று விட்டான். இதில் அவன் மூச்சுத் திணறி தண்ணீரில் மூழ்க தொடங்கினான்.

குளத்தில் மூழ்கி சாவு

இதனை பார்த்த மற்ற சிறுவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஊருக்குள் ஓடிச் சென்று தகவல் தெரிவித்தனர். இதனால் பதற்றம் அடைந்த அசோக்குமார் குடும்பத்தினரும், ஊர்க்காரர்களும் திரண்டு வந்தனர். அதற்குள் அசோக்குமார் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தான்.

அவனது உடலை பொதுமக்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவனது உடலை பார்த்ததும், அசோக்குமாரின் தாய்– தந்தையர், சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது, கல் நெஞ்சையும் கரைப்பதாக இருந்தது.

இதுகுறித்து ராதாபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அசோக்குமாரின் உடலை கைப்பற்றி, நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சப்–இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். நண்பர்களுடன் குளித்த போது, பள்ளி மாணவன் குளத்தில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பரிதாபத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story