மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு; உறவினர்கள் போராட்டம்


மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு;  உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 10 Dec 2017 4:15 AM IST (Updated: 10 Dec 2017 12:40 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் மின்சாரம் தாக்கி இறந்த தொழிலாளியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு,

ஈரோடு கனிராவுத்தர்குளம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் சவுந்தரராஜன் (வயது 27). இவருடைய மனைவி கவுசல்யா (22). இவர்களுக்கு கவிநிலா என்ற 8 மாத பெண் குழந்தை உள்ளது. சவுந்தரராஜன் ஈ.பி.பி.நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் சாய பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இவர் நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்துவிட்டு விளக்கை அணைப்பதற்காக ‘சுவிட்ச்’சில் கை வைத்துள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி சவுந்தரராஜன் தூக்கி வீசப்பட்டார். உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே சவுந்தரராஜன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் சவுந்தரராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை சவுந்தரராஜனின் உடலை வாங்குவதற்காக அவரது உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் அரசு ஆஸ்பத்திரி முன்பு ஒன்று கூடினார்கள்.

பின்னர் அவர்கள் சவுந்தரராஜன் வேலை பார்த்த பட்டறையின் உரிமையாளர் வரவில்லை என்று கூறி ஆஸ்பத்திரி முன்பு உள்ள ஈ.வி.என். ரோட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அங்கு வந்த ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர்கள் முருகையன், விஜயன் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது அவர்கள், ‘சவுந்தரராஜன் நேற்று இரவு (அதாவது நேற்று முன்தினம்) இறந்துள்ளார். ஆனால் இதுவரை சாய பட்டறையின் உரிமையாளர் இங்கு வரவில்லை. ஏற்கனவே அந்த சாயப்பட்டறை உரிய பாதுகாப்பு இல்லாமல் இயங்குவதாக நாங்கள் பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட சாயப்பட்டறையை உடனடியாக மூடவேண்டும்.

மேலும் சாயப்பட்டறை உரிமையாளர் இங்கு உடனடியாக வரவேண்டும். அப்போது தான் நாங்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு சவுந்தரராஜன் உடலை வாங்கி செல்வோம்’ என்றனர். அதற்கு போலீசார், ‘சம்பந்தப்பட்ட சாயப்பட்டறை உரிமையாளர் தற்போது தலைமறைவாகி விட்டார். அவரை உடனடியாக பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. எனவே நீங்கள் உங்களுடைய போராட்டத்தை கைவிடுங்கள்’ என்றனர்.

அதை ஏற்றுக்கொண்ட அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் ஈ.வி.என்.ரோட்டில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story