வேலப்பன்சாவடியில் தனியார் சட்டக்கல்லூரி மாணவர்கள் 2–வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்


வேலப்பன்சாவடியில் தனியார் சட்டக்கல்லூரி மாணவர்கள் 2–வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 10 Dec 2017 4:30 AM IST (Updated: 10 Dec 2017 1:27 AM IST)
t-max-icont-min-icon

வேலப்பன்சாவடியில் தனியார் சட்டக்கல்லூரி மாணவர்கள் நேற்று 2–வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பூந்தமல்லி,

பூந்தமல்லி அடுத்த வேலப்பன்சாவடியில் சவீதா கல்வி குழுமத்தின் கீழ் இயங்கும் சவீதா சட்டக்கல்லூரி இயங்கி வருகிறது. இதில் 500–க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கல்லூரியில் அடிப்படை வசதிகள் சரியாக இல்லை என்றும், கல்லூரி நிர்வாகத்தை கண்டித்தும் சட்டக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தின் நுழைவு வாயிலில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் நேற்று 2–வது நாளாக நீடித்தது. 

இதையடுத்து பூந்தமல்லி உதவி கமி‌ஷனர் ஆல்பிரட் வில்சன் தலைமையில் 100–க்கும் மேற்பட்ட போலீசார் கல்லூரி வளாகத்தில் குவிக்கப்பட்டனர். அம்பத்தூர் உதவி கமி‌ஷனர் சர்வேஷ்ராஜ் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், கல்லூரி நிர்வாகம் பேசி சரியான முடிவு எட்டும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என அவர்கள் தெரிவித்தனர். 

கைவிடமாட்டோம்

இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், இந்த கல்லூரியில் அடிப்படை வசதிகள் சரியாக இல்லை, அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. மேலும் இங்கு படித்துவிட்டு வெளியே சென்ற மாணவர்கள் பார் கவுன்சிலில் தங்களை வக்கீல் என்று பதிவு செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அடிக்கடி கல்வி முறையும் மாற்றப்பட்டு வருகிறது. இதனால் தேர்ச்சி பெறுவது கடினமாக உள்ளது.

கடந்த 2 நாட்களாக மாணவர்களுடன் சேர்ந்து அவர்களது பெற்றோர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை கல்லூரி நிர்வாகம் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. மேலும், கல்லூரி வளாகத்தில் உள்ள கழிவறைகளை பூட்டி வைத்துள்ளனர். எங்களுக்கு முடிவு கிடைக்கும்வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என மாணவர்கள தெரிவித்தனர்.

Next Story