தாம்பரம்–செங்கல்பட்டு இடையே கூடுதலாக மின்சார ரெயில் இயக்க கோரிக்கை


தாம்பரம்–செங்கல்பட்டு  இடையே கூடுதலாக மின்சார ரெயில் இயக்க கோரிக்கை
x
தினத்தந்தி 10 Dec 2017 5:45 AM IST (Updated: 10 Dec 2017 2:21 AM IST)
t-max-icont-min-icon

தாம்பரம்–செங்கல்பட்டு இடையே கூடுதலாக மின்சார ரெயில் இயக்க வேண்டும் என ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

சென்னை,

நெல்லை, தூத்துக்குடி உள்பட தென் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனங்கள், கடைகள், வணிக வளாகங்களில் வேலை செய்து வருகின்றனர். ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம் என்பதைவிட அத்தியாவசிய தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. 

சென்னை நகரத்தில் ஒருவரின் வருமானத்தை வைத்து இதையெல்லாம் சமாளிப்பது என்பது சற்று கடினம். வருகிற சம்பளத்தில் வீட்டு வாடகையே கணிசமான அளவு சென்று விடுவதால் மற்ற செலவுகள் கழுத்தை நெரிக்கிறது. 

இதனால் அவர்கள், சென்னையின் புறநகர் பகுதிகளான மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், வண்டலூர், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலேயே வீடு வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளனர். அப்போதுதான் வாங்கும் சம்பளத்தை வைத்து அவர்களால் ஓரளவாவது சமாளிக்க முடிகிறது.

மின்சார ரெயில்

திருமால்பூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, மறைமலை
நகர், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் போன்ற பகுதிகளில் இருந்து சென்னை மாநகர் பகுதிகளில் வேலைக்கு வரும் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், தொழிலாளர்களுக்கு பெரிதும் கை கொடுப்பது மின்சார ரெயில்கள்தான். 

சென்னை புறநகர் பகுதியில் இருந்து சென்னைக்கு தினமும் வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் எளிதான மற்றும் குறைந்த கட்டண பயணமாக மின்சார ரெயிலைத்தான் பயன்படுத்தி வருகிறார்கள்.

பயணிகளின் எண்ணிக்கைதான் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறதே தவிர, ரெயில்கள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. தற்போது வரக்கூடிய ரெயில்களும் சரியான நேரத்துக்கு வருவது இல்லை என ரெயில் பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

ஆபத்தான பயணம்

இதனால் காலை, மாலை நேரங்களில் வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி மாணவிகள் மின்சார ரெயில்களில் நிற்க கூட இடம் இல்லாமல் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்யும் நிலை காணப்படுகிறது. இதிலும் பெரிய கொடுமை பெண்களும், ஆண்களுக்கு சமமாக படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வதுதான். 

வேலைக்கு செல்பவர்கள், காலையில் அவசர அவசரமாக வீட்டில் இருந்து சரியான நேரத்தில் புறப்பட்டு வந்தாலும் செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி வரும் மின்சார ரெயில்கள் சரியான நேரங்களில் வருவது கிடையாது.

சிக்னலுக்காக நிறுத்தம்

குறிப்பிட்ட நேரத்துக்கு மின்சார ரெயில்கள் வரவில்லை என்றால், அடுத்தடுத்து ஒவ்வொரு ரெயில் நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதும். சரியான நேரத்துக்கு அலுவலகம் செல்லவேண்டுமே என்று ஒட்டுமொத்தமாக அனைவரும் தாமதமாக வரக்கூடிய ரெயிலில் முட்டி மோதி ஏறியும், படிகளில் தொங்கியபடியும் பயணம் செய்கின்றனர்.

2 மின்சார ரெயில்களில் செல்ல வேண்டிய பயணிகள் கூட்டம், ஒரே ரெயிலில் செல்லவேண்டிய நிலை உள்ளது. இதனால் கால் வைக்கவும், காற்று புகவும் கூட இடம் இல்லாமல் ஒருவரோடு ஒருவர் உரசி நின்றபடி சிரமத்துடன் ஒவ்வொரு நாளும் பயணித்து வருகின்றனர். துரதிருஷ்டவசமாக படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்யும்போது விபத்துகளும் ஏற்படுவது உண்டு. 

இப்படி சிரமப்பட்டு பயணம் செய்தாலும் சில நேரங்களில் உரிய நேரத்துக்கு அலுவலகம் செல்ல முடிவது இல்லை. ‘சிக்னல்’ என்ற பெயரில் மின்சார ரெயில்களை ஆங்காங்கே நிறுத்தி வைத்து விடுகிறார்கள். எதற்காக நிற்கிறது? எப்போது எடுப்பார்கள்? என்பது தெரியாமல் பயணிகள் தவிக்கும் அவஸ்தையை சொல்லி மாளாது.

கூடுதல் ரெயில்

செங்கல்பட்டு, திருமால்பூரில் இருந்து மின்சார விரைவு ரெயிலில் வந்தாலும் சேத்துப்பட்டு அருகே வரும் போது பெரும்பாலான நேரங்களில் நடு வழியில் ரெயில்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் சில நேரங்களில் பயணிகள், நேரமாகி விட்டது என்பதற்காக ரெயிலில் இருந்து தண்டவாளங்களில் குதித்து இறங்கி, மற்றொரு ரெயிலை பிடிக்க தண்டவாளங்களை கடந்து ஆபத்தான முறையில் ஓடி வரும் காட்சிகளும் அன்றாடம் அரங்கேறுகிறது. 

இவை எல்லாம் ரெயில்வே நிர்வாகத்துக்கு தெரிந்தும், 
எந்தவிதமான நடவடிக்கையும் எடுப்பதில்லை என ரெயில் பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர். 

சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு தினமும் 40–க்கும் மேற்பட்ட முறை மின்சார ரெயில் சேவை இயக்கப்படுகிறது. இந்த ரெயில்கள் அனைத்தும் கூட்டம் நிரம்பியபடிதான் செல்கிறது. இதனால் தாம்பரம்–செங்கல்பட்டு இடையே கூடுதலாக (‘கட்’ சர்வீஸ்) மின்சார ரெயில்கள் இயக்க வேண்டும் என ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

பயணிகள் கோரிக்கை

தாம்பரத்தில் இருந்து கூடுவாஞ்சேரி வரையாவது (‘லூப் லைன்’ இருப்பதால்) கூடுதலாக மின்சார ரெயில் இயக்க வேண்டும். இதனால் குரோம்பேட்டை, பல்லாவரம், மீனம்பாக்கம், கிண்டி, மாம்பலம், எழும்பூர் போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டியவர்கள் தாம்பரம் வரை வந்து, தாம்பரத்தில் இருந்து மற்றொரு வண்டியில் தொடர் பயணம் செய்வதற்கு வசதியாக இருக்கும். இதனால் பயணிகளுக்கு காத்திருப்பு நேரமும் மிச்சமாகும். கூட்ட நெரிசலில் சிக்கித்தவிக்க வேண்டிய நிலையும் ஏற்படாது என்று ரெயில் பயணிகள் தெரிவிக் கின்றனர். 

தாம்பரம்– செங்கல்பட்டு இடையே 3–வது ரெயில் பாதை அமைந்ததும் இதுபோன்ற பிரச்சினைகள் இருக்காது என்று ரெயில்வே நிர்வாகம் காரணம் கூறினாலும், 3–வது ரெயில் பாதை பணி முடிவதற்கு இன்னும் எத்தனை வருடங்கள் ஆகும் என்றே தெரியவில்லை. 

அதுவரைக்கும் மக்கள் கஷ்டபடத்தான் வேண்டுமா? என்பதை ரெயில்வே நிர்வாகம் பரிசீலித்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை புறநகர் பகுதியை சேர்ந்த ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story