தாமதமாக நடந்து முடிந்த நீர்ப்பாசன திட்ட பணிகள் மக்கள் சேவையில் அதிகாரிகள் மெத்தனம் காட்டக்கூடாது


தாமதமாக நடந்து முடிந்த நீர்ப்பாசன திட்ட பணிகள் மக்கள் சேவையில் அதிகாரிகள் மெத்தனம் காட்டக்கூடாது
x
தினத்தந்தி 10 Dec 2017 3:00 AM IST (Updated: 10 Dec 2017 2:30 AM IST)
t-max-icont-min-icon

மேல் கால்வாய் நீர்ப்பாசன திட்டப்பணிகள் மிகவும் காலதாமதமாக நடந்து முடிந்துள்ளது.

சிவமொக்கா,

மேல் கால்வாய் நீர்ப்பாசன திட்டப்பணிகள் மிகவும் காலதாமதமாக நடந்து முடிந்துள்ளது. அதனால் மக்கள் சேவையில் அதிகாரிகள் மெத்தனம் காட்டக்கூடாது என்று மந்திரி காகோடு திம்மப்பா கூறினார்.

ரூ.71.33 செலவில்...

சிவமொக்கா மாவட்டம் துங்கா அணையில் இருந்து பாசனத்திற்காக கால்வாய்களில் ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் புதிதாக துங்கா அணையில் இருந்து கால்வாய்களுக்கு மோட்டார்கள் மூலம் தண்ணீர் விடும் வகையில் மேல்கால்வாய் நீர்ப்பாசன திட்டம் கடந்த 2012–ம் ஆண்டு ரூ.71.33 கோடி செலவில் தொடங்கப்பட்டது.

இதன் பணிகள் தற்போது முழுமையாக முடிவடைந்துள்ளது. வருகிற 16–ந் தேதி அணையில் இருந்து மோட்டார்கள் மூலம் கால்வாய்களுக்கு தண்ணீர் விட்டு சோதனை நடத்தப்படுகிறது. சோதனை வெற்றிகரமாக முடிந்ததும் பாசனத்திற்கு கால்வாய்களில் முழுமையாக தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.

நீர்ப்பாசன திட்டம்

இதுகுறித்து மந்திரி காகோடு திம்மப்பா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

மேல் கால்வாய் நீர்ப்பாசன திட்டம் கடந்த 2012–ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது அதன் அனைத்து பணிகள் முடிவடைந்துள்ளன. வருகிற 16–ந் தேதி சோதனை நடத்தப்பட உள்ளது. இதற்காக மாவட்ட கலெக்டர், நீர்ப்பாசனத்துறை அதிகாரி, பி.எஸ்.என்.எல். அதிகாரிகள், மின்துறை அதிகாரிகள் மற்றும் அணை என்ஜினீயர்கள் அனைவரும் தயார் நிலையில் உள்ளனர்.

இந்த திட்டத்தின் மூலம் ஹாய்ஹோளே, பாரேஹள்ளா, க‌ஷடனகெரே ஆகிய பகுதிகள் பயன்பெறும். இந்த திட்டத்தை இன்னும் விரைவாக முடித்திருக்க வேண்டும். கடந்த 2012–ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த திட்டம் தற்போதுதான் முடிந்துள்ளது. ஏன் இவ்வளவு காலதாமதம் என்று தெரியவில்லை.

கண்டிக்கத்தக்கது

அதிகாரிகளின் மெத்தனப் போக்கினால்தான் இந்த திட்டம் இவ்வளவு காலதாமதமாக முடிக்கப்பட்டிருக்கிறது என்று நான் கருதுகிறேன். இதேபோல் விஜயாப்புரா, கதக் ஆகிய மாவட்டங்களில் நீர்ப்பாசன திட்டங்கள் தொடங்கப்பட்டன. ஆனால் அவைகள் விரைந்து முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துவிட்டன.

இனிமேல் மக்கள் சேவைகளில் அதிகாரிகள் மெத்தனம் காட்டக்கூடாது. அப்படி காட்டினால் அது கண்டிக்கத்தக்கது. தண்டனைக்குரிய குற்றமாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story