மணிசங்கர் அய்யர், திருமாவளவனை கண்டித்து சேலத்தில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மணிசங்கர் அய்யர், திருமாவளவனை கண்டித்து சேலத்தில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Dec 2017 4:30 AM IST (Updated: 10 Dec 2017 2:31 AM IST)
t-max-icont-min-icon

மணிசங்கர் அய்யர், திருமாவளவனை கண்டித்து சேலத்தில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். உருவபொம்மையை எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்,

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மணிசங்கர் அய்யர், பிரதமர் நரேந்திரமோடியை இழிவாக பேசியதை கண்டித்தும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இந்து கோவில்களை இடிக்க வேண்டும் என்று பேசியதாக கூறி அதை கண்டித்தும் பா.ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

சேலம் மாவட்ட பா.ஜனதா கட்சியின் இளைஞர் அணி சார்பில் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட இளைஞர் அணி தலைவர் சிவகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கோபிநாத், கோட்ட செயலாளர் கோபிநாத், இணை செயலாளர் அண்ணாதுரை, இந்து முன்னணி மாவட்ட தலைவர் சந்தோஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தின்போது திருமாவளவன், மணிசங்கர் அய்யர் ஆகியோரின் உருவப்படத்தை செருப்பால் அடித்தும், எரித்தும் கோ‌ஷம் எழுப்பினர். மேலும் திருமாவளவனின் உருவபொம்மையை எடுத்து வந்து தீ வைத்து எரிக்க முயன்றனர். அதை சேலம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரேசன் மற்றும் போலீசார் தடுத்து அப்புறப்படுத்தினார்கள். உருவபொம்மையை எரிக்க முயன்றதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து அங்கு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் பா.ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் சிவகாமி மற்றும் நிர்வாகிகள் அருள்மணி, செல்வம், தங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story