மராட்டியத்தில் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சட்டசபை நாளை கூடுகிறது


மராட்டியத்தில் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சட்டசபை நாளை கூடுகிறது
x
தினத்தந்தி 10 Dec 2017 3:10 AM IST (Updated: 10 Dec 2017 3:10 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சட்டசபை நாளை கூடுகிறது.

நாக்பூர்,

மராட்டியத்தில் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சட்டசபை நாளை கூடுகிறது. இந்த கூட்டத் தொடரில் அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன.

மராட்டியத்தில் சட்டசபை பட்ஜெட் மற்றும் கோடைக்கால கூட்டத்தொடர் தலைநகர் மும்பையில் நடைபெறும்.

குளிர்கால கூட்டத்தொடர்

சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் நாக்பூரிலும் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு குளிர்கால கூட்டத்தொடர், மாநிலத்தின் இரண்டாவது தலைநகரான நாக்பூரில் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இரண்டு வார காலம் நடைபெறும் இந்த கூட்டத்தொடரில், 13 புதிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. 11 அவசர சட்டங்களுக்கு இரு அவைகளிலும் ஒப்புதல் பெறப்படுகிறது.

மேலும், பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தில் நிலவும் குளறுபடிகள், அரசுக்கு எதிரான பா.ஜனதா மூத்த தலைவர் யஷ்வந்த் சின்காவின் தர்ணா போராட்டம், விவசாய விளைபொருட்களின் விலை வீழ்ச்சி, மராத்தா சமுதாயத்தினருக்கான இட ஒதுக்கீடு, மந்திரிகள் சிலர் மீதான முறைகேடு புகார், ஜி.எஸ்.டி. வரி மற்றும் சாங்கிலி விசாரணை கைதி அடித்து கொலை உள்ளிட்ட பிரச்சினைகளை கிளப்பி பாரதீய ஜனதா- சிவசேனா கூட்டணி அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் வரிந்துகட்டிக் கொண்டு திட்டம் தீட்டி வருகின்றனர்.

நானா பட்டோலே விவகாரம்


மேலும் பிரதமர் மோடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய பா.ஜனதாவை சேர்ந்த நானா பட்டோலே அக்கட்சியில் இருந்து விலகியதுடன், எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்தார். இந்த பிரச்சினையும் சட்டசபையில் எதிரொலிக்கும். சட்டசபையில் பல்வேறு பிரச்சினைகளை கொண்டு வந்து முடக்குவது தொடர்பாக பிரதான எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் வியூகம் வகுக்கும் பணியை தொடங்கி உள்ளன.

இது ஒருபுறம் இருக்க, கூட்டணி கட்சியான சிவசேனா தங்களை தொடர்ந்து வசைபாடி வருவதால், எதிர்க்கட்சிகளை மட்டுமின்றி, சிவசேனாவையும் சமாளிக்கும் நிலைக்கு பா.ஜனதா தள்ளப்பட்டுள்ளது. அதோடு, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தியை அவ்வப்போது புகழ்ந்து பேசி பா.ஜனதாவை தர்மச்சங்கடமான நிலைக்கு சிவசேனா ஆழ்த்துகிறது.

தவிர, பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், முன்னாள் முதல்-மந்திரி நாராயண் ரானேயை சேர்த்தது மட்டுமின்றி, அவருக்கு மந்திரிசபையில் இடம் அளிப்பதற்கும் சிவசேனா ஆட்சேபனை தெரிவித்தது.

அனல் பறக்கும்

இவ்வாறு மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் ஆளும் கட்சிகளான பா.ஜனதா- சிவசேனா, எதிர்க்கட்சிகளை எப்படி சமாளிக்கப்போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆளும் கட்சிகள் இரண்டுபட்ட நிலையில், குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க எதிர்க்கட்சிகள் துடித்து வருகின்றன.

எனவே பரபரப்பான அரசியல் சூழலில் கூடும் குளிர்கால சட்டசபை கூட்டத்தொடரில் அனல் பறக்க உள்ளது.

அதேவேளையில், சமீபத்தில் நடந்து முடிந்த மேல்-சபை இடைத்தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர் பிரசாத் லாட் வெற்றி பெற்றதால், அக்கட்சிக்கு புது உத்வேகம் கிடைத்திருக்கிறது. ஆகையால், எதிர்க்கட்சிகளின் கேள்விக்கணைகளை ஆளும் கட்சி உறுப்பினர்கள் சளைக்காமல் எதிர்கொள்வர் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

வருகிற 23-ந் தேதி குளிர்கால கூட்டத்தொடர் முடிவடைவது குறிப்பிடத்தக்கது.

Next Story